தேர்தலை நடத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுங்கள் – கூட்டு எதிர்கட்சி

182 0

மகாண சபை தேர்தலை  விரைவாக நடத்துவதற்கு  தேர்தல் ஆணைக்குழு  அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூட்டு எதிர்கட்சியின்  தலைவர்கள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் கோரிக்கை விடுத்தனர்.

கூட்டு எதிரணியின்  முக்கிய உறுப்பினர்களான பேராசிரியர்  ஜி. எல். பீரிஸ்,  தினேஷ் குணவர்தன,  மற்றும் வாசு தேவ நாகயக்கார  ஆகியோர் இன்று மஹிந்த தேசப்பிரியவை தேர்தல் ஆணையகத்தில்  சந்தித்து மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர். இக் கலந்துரையாடலின் போதே மேற்கண்ட கோரிக்கை மஹிந்த தேசப்பிரியவிடம் முன்வைக்கப்பட்டது.

இக் கலந்துரையாடல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிடுகையில்,

மாகாண சபை தேர்தல்கள் துரிதமாக நடத்தப்பட வேண்டும்  இதற்கு  தேர்தல் ஆணையகம் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.  ஜனநாயக ரீதியில் தேர்தல் இடம்பெற்றால்  தேர்தலின் பெறுபேறுகள் தமக்கு எதிராகவே கிடைக்கப் பெறும் என்ற காரணத்தினாலே அரசாங்கம் தேர்தலை தொடர்ந்து பிற்போட்டு வருகின்றது.

எம்முறையில் மாகாண சபை தேல்தலை நடத்த வேண்டும் என்று புதிய பிரச்சினையினை கிளப்பிவிட்டு  தொடர்ந்து தேர்தலை பிற்போடும் முயற்சிகளையே அரசாங்கம் மேற்கொள்கிறது.  புதிய தேர்தல் முறைமையினை கூட்டு எதிரணி ஆரம்பத்திலே எதிர்த்தது.   ஆனால் அவ்வேளை அரசாங்க கட்சிகள் புதிய தேர்தல் முறைமைக்கு ஆதரவு வழங்கியது ஆனால் இன்று அரசாங்கத்தின் கட்சிகளே  புதிய தேர்தல் முறைமைக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். இது பிரதமரின்  அரசியல் கபட நாடகமாக உள்ளது என்றார்.

Leave a comment