நல்லிணக்கத்திற்கு கிரிக்கெட் விளையாட்டின் மூலம் பங்களிப்பு செய்ய முடியும் என்று பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் பட்ரிஸியா ஸ்காட்லாண்ட் தெரிவித்துள்ளார்.
இதற்கு தமது அமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்த அவர் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறா அபிவிருத்தி 17 இலக்குகளைக் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது.
இதில் நான்காவது இலக்காக முழுமையான சிறந்த கல்வியை உறுதி செய்தல் மற்றும் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கல்வி கற்பதற்கான வசதிகளை செய்து கொடுப்பது என்பதேயாகும் என்றும் கூறினார்.
கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை இவர் நேற்று சந்தித்தார். கல்வியமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இந்த இலக்குத் தொடர்பில் பொதுநலவாய ஒன்றியம் கூடுதலாக கவனம் செலுத்தியிருப்பதாக தெரிவித்த அவர்.
தொற்றா நோய்களில் இருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பதற்கும் கல்வியின் மூலம் செயற்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாடசாலைகளில் காலை உணவை பெற்றுக்கொள்வதற்கும் நாளாந்தம் உடற்பயிற்சியை மேற்கொள்வதற்கான பழக்கத்தையும் மாணவர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிப்பதனால் பொதுநலவாய ஒன்றியத்திற்கு உட்பட்ட நாடுகளில் உள்ள சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன, மத, பேதங்கள் இன்றி ஒரேயின மக்களாக அனைவருக்கும் உதவி, நல்லிணக்கம் தொடர்பான புரிந்துணர்வை மாணவர்கள் மத்தியில் கட்டியெழுப்புவது முக்கியமானதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

