சென்னை-சேலம் பசுமை வழிச்சாலையால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் – மத்திய மந்திரி தகவல்

4031 0

சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்தால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை இணை மந்திரி மான்சுக் கூறினார். 

பாராளுமன்ற மாநிலங்களவையில் சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம் தொடர்பாக சசிகலா புஷ்பா எம்.பி. நேற்று பேசினார்.

பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு இருப்பது மத்திய அரசுக்கு தெரியுமா?, அந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதால் விவசாயிகள் சிலர் தற்கொலை செய்திருக்கிறார்கள் அதன் விவரம் என்ன? இந்த திட்டத்தை மறு பரிசீலனை செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? என அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு மத்திய சாலை போக்குவரத்துத்துறை இணை மந்திரி மான்சுக் பதில் அளித்து பேசினார்.

அதன் விவரம் வருமாறு:-

சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் 4 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அவை அனைத்துமே காடுகள் மற்றும் இயற்கை வளங்களை அழித்தலுக்கு எதிரானதுதான். திட்டத்துக்கு எதிரானது அல்ல.

விவசாயிகள் தற்கொலை பற்றி இதுவரை எந்த தகவலும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை. பசுமை வழிச்சாலை தொடர்பாக மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த சாலை அமைக்கப்பட்டால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.  இவ்வாறு அவர் பதில் அளித்து பேசினார்.

Leave a comment