வாங்கிய கடன் மோசமான முறையில் வீண் விரயம் – விஜித ஹேரத்

406 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தூக்கு மேடையினைக் காட்டி மக்களை திசை திருப்பும் செயற்பாடுகளையே மேற்கொண்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சைனா போர்ட் நிறுவனத்திடம் இலஞ்சம் பெற்றது தொடர்பான விவாதத்தில் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளாமல் இருந்தமையானது அவர் இலஞ்சம் வாங்கியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் வாங்கப்பட்ட கடன்கள் மிக மோசமான முறையில் வீண் விரயம் செய்யப்பட்டதனால் இன்று அதில் இந்த நாடு சிக்கி தவித்து வருவதாகவும் அவர் சுட்டிகாட்டினார்.

மட்டக்களப்பு பயனியர் வீதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டை பாதுகாக்கும், நாட்டை கட்டியெழுப்பும் மக்கள் நேயமிகு ஆட்சி என்னும் தலைப்பில் இந்த கருத்தரங்கு நேற்று (29) மாலை நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு தொகுதி இணைப்பாளர் ஏ.பிரபு, கல்குடா தொகுதி இணைப்பாளர் திலீப் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் தற்போதைய நிலமைகள் தொடர்பில் கட்சி உறுப்பினர்களுக்கு கருத்து பகிர்வுகள் நடைபெற்றன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், இந்த நாடு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் பேருக்கு இருக்கின்ற போதும் அரசாங்கம் ஒன்று செயற்படுகின்றதா என்ற சந்தேகம் இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்று சமூக மட்டத்திலும் அரசியல் மட்டத்திலும் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன.

இன்று வங்கிகள் கொள்ளையிடப்படுகின்றன, போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளன, துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. இது சமூக நெருக்கடியாக மாறியுள்ளது. மக்களுக்கு வாழ முடியாத நிலமை ஒன்று ஏற்பட்டுள்ளது. பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிபொருட்களின் விலை அதிகரிப்பு என பல்வேறு சுமைகள் மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ளன.

முன்னைய காலங்களில் இந்த நாட்டினை வெள்ளைக்காரர்கள் சுரண்டிச் சென்றதன் காரணமாக எமக்கு கடன் பட்டவர்களாக அவர்கள் இருந்தனர். ஆனால் இன்று நாங்கள் அவர்களிடம் கடன்பெற்று அவர்களுக்கு கடன்செலுத்த வேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.

1950 ஆம் ஆண்டு முதல் கடன் இந்த நாட்டில் பெறப்பட்டது. அன்று தொடக்கம் இன்று வரை நாங்கள் உலக வங்கி, நாணய நிதியத்திடம் இருந்து கடன்களை பெற்றுக்கொண்டே வருகின்றோம்.

எடுத்த கடன்களை சரியான திட்டமிடலுடன் முதலீடு செய்திருந்தால் இந்த நாடு முன்னேறியிருக்கும். ஆனால் எடுக்கப்பட்ட கடன்கள் மிக மோசமான முறையில் வீண்விரயம் செய்யப்பட்டதனால் இன்று அதில் சிக்கி தவித்து வருகின்றோம். ஒரு கடனைப் பெற்று ஒரு சில்லரைக் கடையினை ஆரம்பிக்கும் போது அந்த கடையினை பல வகையிலும் முன்னேற்றி தனது குடும்பத்தினையும் முன்னேற்றி கடனையும் அடைக்கும் நிலையினை உருவாக்குவோம்.

நாங்கள் இந்த நாட்டுக்காக பெற்றுக்கொண்ட கடன்களை சரியான முறையில் பயன்படுத்தவில்லை. அதனை முறையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளோம். மத்தல விமான நிலையம் என்ற கடை திறக்கப்பட்டது. பெறப்பட்ட கடன் மிக மோசமான முறையில் செலவு செய்யப்பட்டது. அந்த திட்டத்தினால் எந்த இலாபமும் நாங்கள் ஈட்ட முடியாத நிலையில் அதனை இந்தியாவுக்கு வழங்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

சீனாவிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தினைப் பெற்று விமானம் வராத விமான நிலையத்தினை கட்டினோம். அதனால் எந்த பிரயோசனத்தையும் நாங்கள் அடையவில்லை.

பெறப்பட்ட கடன்களில் பெரும்பாலானவை மோசடிகள் செய்யப்பட்டுள்ளன. சைனா போர்ட் நிறுவனத்திடம் இருந்து 7.6 மில்லியன் டொலர் கடந்த அரசாங்கத்தினால் இலஞ்சமாக பெறப்பட்டது. இது தொடர்பான விவாதம் ஒன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற போது முன்னாள் ஜனாதிபதி, பாராளுமன்றத்திற்கு சமுகம் தரவுமில்லை, அந்த குற்றச்சாட்டினை நிராகரிக்கவும் இல்லை. ஆகவே அவர்கள் இலஞ்சம் பெற்றது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் இவ்வாறு கொள்ளையிட்ட பணத்தை செலுத்த வேண்டிய பொறுப்பு இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களின் தலைகள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆட்சி பொறுப்பினை ஏற்றுக்கொண்ட இந்த அரசாங்கமும் சேற்றுக்குள் புதையுண்ட வாகனம் போல் முன்னேறி செல்ல முடியாத நிலையில் இருக்கின்றது. இந்த அரசாங்கம் எந்தவித உற்பத்திகளையும் மேற்கொள்ளாமல் இருக்கும் வளங்களை விற்பதிலேயே குறியாக இருக்கின்றனர். உற்பத்தி வருமானங்கள் வீழ்ச்சியடைந்து வருமானங்கள் இல்லாமல் பொறிக்குள் சிக்கிய நிலையிலேயே மக்கள் இன்று உள்ளனர்.

இந்த அரசாங்கத்திடம் எந்த விதமான பொருளாதார கொள்கைகளும் இல்லை. எமது சொத்துகளை விற்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் 4800 கோடி ரூபாவினை இந்த அரசாங்கம் வாங்கியுள்ளது. சொத்துகளை விற்பதற்கு கூட கடன்வாங்கி விற்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாலோ ஐக்கிய தேசிய கட்சியாலோ இந்த பொருளாதார நெருக்கடிக்கு எந்த தீர்வும் வழங்க முடியாது என்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி தொடரும் போது சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றது.

இன்று நுண்கடன்களினால் மக்கள் தற்கொலை செய்யும் நிலையும் அதிகரித்து வருகின்றது. வட கிழக்கில் இந்த நுண்கடன்களினால் தற்கொலைகள் வீதம் அதிகரித்து வருகின்றது. எந்தவித வருமானமும் இல்லாமல் சிறிய சிறிய நுண்கடன் நிறுவனங்களிடம் கடன்களை பெற்றுக்கொள்ளும் கிராமபுற மக்கள் அதனை கட்டமுடியாத நிலையில் தற்கொலைகள் நடக்கின்றன.

ஜனாதிபதி கடந்த காலத்தில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வில்லை. மக்களுக்கு வழங்கிய எந்த உறுமொழியையும் நிறைவேற்றாமல் தூக்கு மேடையினைக் காட்டி மக்களை திசை திருப்பும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும் போது சமூக நெருக்கடி அதிகரிக்கின்றது. அதனை திசை திருப்புவதற்காக மதவாதத்தினையும் அடிப்படை வாதத்தினையும் இந்த ஆட்சியாளர்கள் தூண்டும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.

மக்களின் பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக வரலாற்றில் கடந்த கால ஆட்சியாளர்கள் இனவாதத்தினையே கையிலெடுத்துள்ளனர். இந்த நிலையே இன்றும் நடந்துவருகின்றது. இவ்வாறான தீர்வுகளை கையில் எடுப்பதன் மூலம் எந்த தீர்வினை காணமுடியாது என்பது கடந்த காலத்தில் பாடம் புகட்டப்பட்டுள்ளது.

இது மஹிந்தவினதோ, மைத்திரியினதோ தனிப்பட்ட பிரச்சினை அல்ல, துர்நாற்றம் வீசும் பொருளாதார கட்டமைப்பின் பலவீனத்தினால் ஏற்பட்ட பிரச்சினையாகும். இன்றைய பொருளாதார நிலைமை இறந்து போகவுள்ள ஒரு நோயாளிகும். அதனை காப்பாற்றுவதற்கு மைத்திரி, ரணிலால் முடியாத காரியமாகும்.

இந்த நாட்டில் பிரபாகரனையும் ஹிட்லரையும் உருவாக்க நினைப்பவர்களினால் இந்த நாட்டில் இனவாதத்தினையும் பாசிசவாதத்தினையும் விதைக்க முடியுமே தவிர இந்த நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. நாங்கள் இனியும் நாம் நாகரீகத்தினை நோக்கியே நகரவேண்டும். பின்னோக்கி நகரும் நிலையினை ஏற்படுத்தி விடக்கூடாது.

இந்த நாட்டினை கட்டியெழுப்பும் வகையில் பாரிய வேலைத்திட்டமும் புதிய தலைமைத்துவமும் இந்த நாட்டிற்கு தேவையாகவுள்ளது. இந்த அரசாங்கத்திடம் இருந்து இனியும் எதனையும் எதிர்பார்க்க முடியாது.

இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளுக்கும் நெருக்கடி நிலை காணப்படுகின்றது. ஜனாதிபதியும் பிரதமரும் வெளியில் சிரித்துக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் கீரியும் பாம்பும்போலவே காணப்படுகின்றனர்.

நல்லாட்சியை ஏற்படுத்துவோம் என்று உறுதியளித்திருந்தாலும் பிரதான கட்சியின் இரண்டு தலைவருக்கும் இடையில் எதுவித புரிந்துணர்வுகளும் இல்லை, இரண்டு கட்சிகளுக்கும் இடையில் எந்தவித ஒற்றுமையும் இல்லை. அவ்வாறான நிலையில் எவ்வாறு இவர்கள் இந்த நாட்டினை முன்னேற்றுவார்கள்.

ரணில் விக்ரமசிங்க தனது கட்சி ஆட்சி கைப்பற்றவேண்டும் என பாடுபடுகின்றார். மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதியாக தான் மீண்டும் வரவேண்டும் என்ற நோக்குடன் செயற்படுகின்றார். இந்த இரண்டு பேரின் நோக்கங்களும் நிறைவேறப் போவதில்லை.

இந்த நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில் இருந்து மீட்பதற்கு புதிதாக சிந்திக்ககூடிய அரசியல் தலைமைத்துவம் ஒன்று இந்த நாட்டுக்கு தேவையாகவுள்ளது. நாட்டினை கட்டியெழுப்ப வேண்டுமானால் அதற்கு நன்கு திட்டமிடப்பட்ட தேசிய கொள்கை ஒன்று தேவையாகும்.

பல்வேறு பிரச்சினைகளுக்கு எந்தவித திட்டமிடப்பட்ட கொள்கையும் இல்லாதநிலையே இன்று காணப்படுகின்றது. குறிப்பாக பெருகிவரும் சனத்தொகைக்கு ஏற்ப காணிகளை வகுக்கும் திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இதன் காரணமாக எதிர்காலத்தில் இந்த காணிப் பிரச்சினையால் சிவில் யுத்தம் ஒன்றை எதிர்கொள்ளும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. அரசாங்கம் இது தொடர்பில் எந்தபொறுப்பும் இல்லாதவர்கள்போல் நடந்து செல்கின்றனர். ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் அந்த நாட்டில் நன்கு திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Leave a comment