யாழ்ப்பாணத்தில்  பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் எனும் தலைப்பிலான, சர்வதேச பெண்கள் மாநாடு(காணொளி)

472 0

யுத்தத்தின் பின்னரான சூழலில்,பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் எனும் தலைப்பிலான, சர்வதேச பெண்கள் மாநாடு, யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமானது.

யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில், நேற்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான மாநாடு இன்று நிறைவடையவுள்ளது.

மாணவிகளின் நடன நிகழ்வுடன் ஆரம்பமான மாநாட்டில், பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர் சுதாகரன் கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினராக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரம் உட்பட துறைசார்ந்த பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.

பெண்கள் தொடர்பான ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் பெண்கள் தொடர்பான அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கொள்கை வகுப்பிற்கான முன்மொழிவுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. முப்பதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள்,பல்வேறு நாடுகளிலுமிருந்து வருகை தந்து தமது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர்.

மாநாட்டின் ஆய்வுத் தொடக்கவுரை, பிரதமரின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க நிகழ்த்ததினார்.

மாநாட்டில் 8 தலைப்புக்களில் 60 ஆய்வுகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 83 ஆய்வாளர்கள் பங்குபற்றி, தமது ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்புரைகளை வழங்கியுள்ளனர்.

நேற்றைய நிகழ்வில், பால்நிலை சமத்துவம், பெண்களின் பொருளாதாரம் மற்றும் வலுவூட்டல், பெண்களின் உளசமூக மேம்பாடு, சமூக கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு, பெண்களும் ஊடகமும், கட்டிளமைப் பருவத்தினரும் மாறிவரும் சூழலும் என்ற தலைப்புக்களில் ஆய்வுகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

நிகழ்வில் நடனமாடிய பாடசாலை மாணவிகள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், பிரதம அதிதிகள் மற்றும் சிறப்பு அதிதிகளுக்கு, மாநாட்டினை நினைவுகூறும் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மாநாட்டில் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தி பணியாற்றும் பல மகளீர் அமைப்புக்களைச் சேர்ந்த பெண்கள், சர்வதேசத்திலிருந்தும், உள்நாட்டில் இருந்தும் கலந்துகொண்டனர்.

Leave a comment