காலி மைதான சர்ச்சைக்கான காரணம் ராஜபக்ஷ அரங்கே – விஜயதாச

229 0

காலி விளையாட்டு அரங்கம் மீது எந்த சிக்கலும் வரவில்லை, அதனை சார்ந்து கட்டப்பட்டுள்ள அனாவசிய கட்டடங்கள் தொடர்பிலேயே பிரச்சினை எழுந்துள்ளது என உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

காலி மைதானம் இடமாற்றப்படுவதாக இன்று பாராளுமன்றத்தில் பொது எதிரணி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

காலி கிரிக்கெட் மைதானம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து தவறான கருத்துக்கள் ஊடகங்கள் மூலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. காலி மைதானத்தை உரிய இடத்திலிருந்து அகற்றுவதாக கூறும்  கதைகள் உண்மையில்லை. இலங்கையில் புராதான பிரதேசங்களில் காலி கோட்டை சார்ந்த பிரதேசமும்  யுனெஸ்கோவினால் தொடர்ச்சியாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது.

இதில் காலி விளையாட்டு அரங்கம் மீது எந்த சிக்கலும் வரவில்லை, அதனை சார்ந்து கட்டப்பட்டுள்ள  அனாவசிய கட்டடங்கள் தொடர்பிலேயே பிரச்சினை எழுந்துள்ளது. விளையாட்டு மைதானத்தை அகற்றக் கோரியோ அல்லது அங்கு கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டாம் எனவோ யுனெஸ்கோ ஒருபோதும் தெரிவிக்கவில்லை.

சட்டவிரோதமாக அல்லது அனாவசியமாக அப்பகுதிகளில் கட்டடங்களை அமைக்க வேண்டாம் அவ்வாறு அமைத்தால் உலகின் புரதான பிரதேசங்களின் பட்டியலில் இருந்து காலி பிரதேசத்தை நீக்கி விடுவோம் என்றே கூறுகின்றனர்.

இப்போது சிக்கல் என்னவெனில் காலி மைதானத்தில் அனாவசியமாக அமைக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ பார்வையாளர் அரங்கு நீக்குவதா அல்லது அதனை வைத்திருப்பதா என்பதாகும். மஹிந்த ராஜபக்ஷ பார்வையாளர் அரங்கை வைத்திருந்தால் உலககின் புராதான அடையாளங்களில் இருந்து காலி கோட்டை பகுதி நீக்கப்படும்.

ஆகவே மஹிந்த ராஜபக்ஷ பார்வையாளர் அரங்கு வேண்டுமா அல்லது புராதான  அடையாளம் வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும். ராஜபக்ஷ அரங்கை நீக்க வேண்டும் என்றே யுனெஸ்கோ எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே அதனையே நாம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம் என  குறிப்பிட்டார்.

Leave a comment