ஆப்கானிஸ்தான் வான்வழி தாக்குதல் – 14 பேர் பலி

1735 0

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் 14 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத இயக்கத்திற்கும், பாதுகாப்புப்படைக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசை எதிர்த்து அரசை எதிர்த்து போட்டி அரசு நடத்தும் தலிபான் இயக்கம், நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
தாலிபான் அமைப்பினரை பணியவைத்து அவர்களை அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வைக்கும் நோக்கில் பயங்கரவாதிகளின் மீதான வான்வழி தாக்குதலை அமெரிக்கா அதிகரித்துள்ளது. மேலும், ஆப்கன் விமானப்படைக்கும் உதவி வருகிறது.
இந்நிலையில், வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரில் உள்ள சர்தாரா எனும் இடத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த தாக்குதலை நடத்தியது அமெரிக்க படையினரா? அல்லது ஆப்கானிஸ்தான் படையினரா? என உறுதிப்படுத்த முடியவில்லை என ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறையின் செய்தி தொடர்பாளர் முகமது ரத்மனிஷ் தெரிவித்தார்.
இதற்காக, தாக்குதல் நடைபெற்ற பகுதியில் விசாரணை மேற்கொள்வதற்காக காபூலில் இருந்து விசாரணை குழு அப்பகுதிக்கு விரைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a comment