நிலைமாறுகால நீதி கிடைக்குமா? -பி.மாணிக்கவாசகம்

416 0

நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளில் ஒன்றாகிய காணாமல் போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. அந்த அலுவலகத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்து, சர்வதேச விசாரணையே தேவை என கோரி, அதற்கு எதிராக, காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றார்கள்.

இந்த மாவட்டங்களில் காணாமல் போனோருடைய உறவினர்களுடன் நடத்திய அமர்வின்போதே, காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்திருக்கின்றது. .

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலும், கிளிநொச்சி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்திலும் இந்த அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மதத்தலைவர்கள் மற்றும் சமூக முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட சந்திப்பும், காணாமல் போனோருடைய உறவினர்களுக்கான அமர்வும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. மூன்றாவதாக செய்தியாளர்களுடனான சந்திப்பும் இடம்பெற்றிருந்தது.

முதலாவது சந்திப்பில் கலந்து கொண்டிருந்த முக்கியஸ்தர்கள் இந்த அலவலகத்தின் செயற்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள். ஆனால் காணாமல் போனோரின் உறவினர்களுக்கான அமர்வு சுமுகமாக அமையவில்லை. சுமார் ஆயிரம் பேரளவில் இந்த அமர்வுகளில் கலந்து கொண்டிருந்ததாகவும், ஒருசிலரே மண்டபத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கின்றனர்.

யாழ்ப்பாணச் சந்திப்பு பயனுள்ளதாக அமைந்திருந்தது. எதிர்ப்பும் இருந்தது என்பதே காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளின் கூற்றாகும். ஆனால் கிளிநொச்சியில் நிலைமை மறுதலையாக இருந்தது. காணாமல் போனோருடைய ஒருசில குடும்பங்களே இந்த அமர்வில் கலந்து கொண்டதாகவும் பெரும் எண்ணிக்கையானோர் நிகழ்வில் கலந்து கொள்ளாமல், மண்டபத்;துக்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஒரு கட்டத்தில் கட்டுக்கடங்காமல் நிகழ்வு நடந்த மண்டபத்திற்குள் பிரவேசிக்க முற்பட்டதைத் தடுப்பதற்காக அதிகாரிகள் பொலிசாரின் உதவியை நாட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இந்;த அலுவலத்திற்கு வெளிப்படையாகவே தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பானது, அதிகாரிகள் மத்தியில் சஞ்சலத்தையே ஏற்படு;த்தி உள்ளது. மீண்டும் மீண்டும் இந்த அலுவலகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைக்கவேண்டும். தங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகள் வலியுறுத்தி கூறியிருந்தனர். ஆயினும் எதிர்ப்புகள் காரணமாக, காணாமல் போனோர் அலுவலகத்தை வெற்றிகரமாகச் செயற்படுத்துவது என்பது, மிக மிக கடினமான காரியம் என்பதை அதிகாரிகள் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள்.

இந்த அலுவலகத்திற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வரவதற்கு ஒரு வருடமும், பிரேரணை நிறைவேற்றப்பட்டு, அந்த அலுவலகம் உருவாக்கப்பட்டு, அதற்கான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அதனைச் செயற்படச் செய்வதற்கு மேலும் ஒரு வருட காலமும் கடந்துள்ளது. அதன் பின்னரே அந்த அலுவலகம் செயற்படத் தொடங்கியிருக்கின்றது.

வடக்;கில் மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் நடத்தப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்தின் அமர்வுகள் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கவோ அல்லது, அந்த அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கான ஒத்துழைப்பைப் பெறவோ முடியாமல் போயிருக்கின்றது. இது காணாமல் போனோரைக் கண்டுபிடிப்பதற்கும், ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதி நிலைநிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாட்டைக் கடினமாக்கி உள்ளது. வேண்டும்.

முன்னைய குழுக்களைவிட அதிகாரம் வாய்ந்தது……..?

யுத்தத்தை முடிவுக்குக் கெண்டு வந்த முன்னைய அரசாங்க காலத்திலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டு பிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, அதன் பி;னனர் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவாகிய பரணகம ஆணைக்குழு ஆகியன நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விசாரணைகளை நடத்தியிருந்தன. ஆயினும் அந்த விசரணைகள் நடத்தப்பட்ட முறைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை இழந்திருந்தார்கள்.

அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுக்களின் முன்னிலையில் தமது சாட்சியங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மக்கள் அவற்றில் கலந்து கொண்டு, காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளைப் பற்றிய விபரங்களைத் தெரிவித்திருந்தார்கள். தமது உறவுகள் காணாமல் ஆக்கப்படுவதற்கு முன்னால் யாரால் எங்கு வைத்து, எப்படி கொண்டு செல்லப்பட்டார்கள் என்பது பற்றியும், காணாமல் போனதன் பி;னனர் யாரோடு எங்கே இருந்தார்கள் என்பது பற்றியும் தாங்கள் அறிந்திருந்த துல்லியமான தகவல்களை, பலர் இந்த விசாரணைகளில் தெரிவித்திருந்தனர்.

இந்த விசாரணைகளின்போது கேட்கப்பட்ட பக்கசார்பான கேள்விகளும், அளிக்கப்பட்ட சாட்சியங்கள், சிங்கள மொழியில் திருப்தியற்ற வகையில் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பும் இவற்றில் சாட்சியமளித்தவர்களின் நம்பிக்கையை சிதைத்திருந்தன. காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டு பிடிப்பதற்கு இந்த விசாரணைகள் ஒருபோதும் உதவமாட்டாது, ஆட்களைக் காணாமல் போகச் செய்தமைக்கு சரியான நீதி கிடைக்கமாட்டாது என்ற மனப்பதிவையே அந்த குழுக்களின் விசாரணைகள் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தன.

இந்த விசாரணைகளில் எங்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. என்றாலும், அரசாங்கம் நடத்திய விசாரணைகளில் கலந்து கொள்ளவில்லை என்று எங்கள் மீது குற்றம் சுமத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே நாங்கள் உங்கள் முன்னிலையில் சாட்சியமளிக்க வந்துள்ளோம் என்று விசாரணையாளர்களிடம் பலர் நேரடியாகவே தெரிவித்திருந்தனர்.

இந்த இரண்டு குழுக்களின் விசாரணைகளின் முடிவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கத்தக்க வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் அந்த விசாரணைகள் பயனற்றுப் போயின என்ற முடிவுக்கே அந்த விசாரணைகளில் பங்குபற்றியவர்கள் வந்துள்ளனர்.

இத்தகைய பின்னணியில்தான் நிலைமாறுகால நீதிப் பொறிமுறையின் ஓர் அம்சமாக காணாமல் போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டு, அதற்கான அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு, அந்த அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களை மாவட்டங்களில் சென்று சந்தித்து வருகின்றார்கள்.

காணாமல் போனோர் அலுவலகமானது, முன்னைய விசாரணை குழுக்களிலும் பார்க்க அதிக அதிகாரம் வாய்ந்தது என்று அந்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். தங்களுக்கு அளிக்கப்படுகின்ற சாட்சியங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், பதவி மற்றும் அந்தஸ்து நிலை பாராமல், அவர்களை விசாரணை செய்யும் அதிகாரம் இந்த அலுவலகத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது கடினம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள சாலிய பீரிஸ், ‘இருப்பினும், ஆழமான, உச்சகட்ட விசாரணைகளை நாங்கள் நடத்துவோம்’ என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் உறுதியளித்திருக்கின்றார்.

இந்த அலவலகத்திற்கென இப்போது நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மூன்று வருடங்கள் இந்தப் பதவியில் இருந்து செயற்படுவார்கள். இருப்பினும் ஏனைய விசாரணை குழுக்களைப் போலல்லாமல், இந்த அலுவலமானது, தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவைப் போன்று நிரந்தரமாகச் செயற்படும் என்பது விசேடமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகார தத்துவம்

விசாரணைகளில் கண்டறியப்படுகின்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட எவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் அதிகாரம் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு வழங்கப்படவில்லை. காணாமல் போயுள்ள ஒருவர் எங்கு இருக்கின்றார் அல்லது எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார் என்பது கண்டறியப்பட்டாலும்கூட, அவருடைய ஒப்புதல் இல்லாமல் அவரைப் பற்றிய தகவல்கள் குடும்பத்தினருக்குத் தெரிவி;க்கப்படமாட்டாது என்பதும் முக்கியமாக இந்த அலுவலகத்தின் நிலைப்பாடாகும்.

காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்திருப்பதைப் போன்று அளிக்கப்படுகின்ற சாட்சியங்களின் அடிப்படையில் எவராக இருந்தாலும், ஆழமாகவும் உச்சகட்ட நிலையிலும் விசாரணை செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லாவிட்டால், அந்த விசாரணையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எவ்வாறு நீதி வழங்கப்பட முடியும் என்பது தெரியவில்லை. முன்னைய இரண்டு விசாரணை குழுக்கள் செய்ததைப் போன்று, இந்த அலுவலகமும் விசாரணைகளை நடத்தி சாட்சியங்களை அறிக்கைகளாகப் பதிவு செய்யுமேயானால், அந்த குழுக்களிலும் பார்க்க, இது அதிக அதிகாரம் தத்துவம் வாய்ந்தது என்று எப்படி கருத முடியும் என்பதும் தெரியவில்லை.

முன்னைய விசாரணை குழுக்களின் விசாரணைகளில் எந்தவிதமான பயனும் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே, நிலைமாறுகால நீதிப் பொறிமுறையின் ஓர் அம்சமாக உள்ளுர் விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கும் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

நிலைமாறு கால நீதிக்கான பொறிமுறைகள் பாதிக்கப்பட்ட மக்களை மையப்படுத்தியதாக உருவாக்கப்பட வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்டவர்களின் பங்களிப்பும், அவர்களுடைய எதிர்பார்ப்புக்களின் உள்ளடக்கமும் இந்தப் பொறிமுறைகளில் முக்கியமாக இடம்பெற்றிருக்க வேண்டும் என்று, பொறுப்பு கூறும் விடயத்தில் சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி உள்ளது. ஆனால், காணாhமல் போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அந்த மக்களின் சார்பில், இந்த அலுவலத்திற்கான பிரேரணை கொண்டு வரப்பட்டபோதே முன்வைக்கப்பட்டிருந்தது.

முக்கியமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் என இந்தப் பொறிமுறைக்கு பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோள். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காணாமல் போனோருக்கான அலுவலகம் என்ற பெயரே சூட்டப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், காணாமல் போனவர்கள் எவரும் எங்குமே இல்லை என்று ஜனாதிபதி வடமாகாணத்தக்கான விஜயம் ஒன்றின்போது தெரிவித்திருந்தார்.

காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் கிளிநொச்சியில் ஏற்பாடு செய்திருந்த காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பின்போது, காணாமல் போனவர்கள் எவருமே இல்லையென்று ஜனாதிபதி கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டி, இந்த நிலையில் காணாமல் போயுள்ளவர்களை உங்களால் எப்படி கண்டு பிடிக்க முடியும்? எதற்காக இந்த விசாரணை? என்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இல்லாத ஒன்றைத் தேடிக் கண்டுபிடிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு வருவது ஏமாற்று வித்தை அல்லவா என்பதே அந்தக் கேள்வியின் உள்ளார்ந்த கருத்தாகும்.

புறச்சூழல்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்;டவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பேற்று, அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் அல்லது எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து பதில் கூற வேண்டும் என வலியுறுத்தி, வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் போனோரின் உறவினர்கள் வீதியில் இறங்கி தொடர்ச்சியாகப் போராடி வருகின்றார்கள். இந்தப் போராட்டம் 500 நாட்களைக் கடந்துள்ளது. இந்தச் சூழலிலேயே காணாமல் போனோர் அலுவலகம் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து தனது செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்து, அது தொடர்பி;ல் அவர்களுடைய கருத்துக்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது.

பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் உண்மையிலேயே, அந்த அலுவலகம் உருவாக்கப்படுவதற்கு முன்னரே உள்வாங்கப்பட்டு, அதன் அடிப்படையில் அந்தப் பொறிமுறை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. இதுபற்றி ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுவிட்டது. இந்த நிலையில்தான் அந்த அலுவலக அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுடைய கருத்துக்களைத் திரட்ட முற்பட்டிருக்கின்றார்கள்.

இந்த அலுவலகம் செயற்படத் தொடங்கியுள்ள சூழலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றார்கள். தமது உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளமைக்கு நீதி கேட்டு முன்னெடுக்கப்பட்டுள்ள வீதிப் போராட்டம் ஒருபக்கம் இருக்க மறுபக்கத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதிமன்றங்களில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை தொடர்பான வழக்குகளும் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு நீதிமன்றத்தின் மூலம் நியாயம் தேட முற்பட்டிருப்பவர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள். வழக்குத் தவணைகளுக்காக நீதிமன்றங்களுக்கு அவர்கள் செல்லும்போது சிவிலுடையில் உலவும் புலனாய்வாளர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து கண்காணித்தும் புகைப்படங்கள் எடுத்தும் அச்சுறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

யுத்தம் முடிவடைந்ததையடுத்து, வட்டுவாகல் பகுதியில் அரசாங்கம் விடுத்த அறிவித்தலை ஏற்று இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒருவராகிய முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளாரான எழிலன் தொடர்பாக அவருடைய மனைவி அனந்தி சசிதரனும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அது தொடர்பான விசாரணைகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு, அவருக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இராணுவ புலனாய்வளார்களே இந்த ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்திருந்தார்கள் என்று வெளிப்படையாகவே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்தே அந்த அச்சுறுத்தலி கைவிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் வழக்குத் தவணைகளுக்காக அனந்தி சசிதரன் பயணம் செய்த வாகனம் அடிக்கடி சிவிலுடை தரித்த புலனாய்வாளர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களினால் பின்தொடரப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.

இத்தகைய நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் நாவற்குழி இராணுவ முகாமைச் சேர்ந்த துமிந்த கெப்பிட்டி வெலான என்ற இராணுவ அதிகாரியினால் 1996 ஆம் ஆண்டு கைது செய்து கொண்டு செல்லப்பட்ட 24 இளைஞர்கள் காணாமல் போயுள்ள சம்பவம் குறித்து யாழ் மேல் நீதிமன்றத்தில் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அக்காலச் சூழலில் இத்தகைய வழக்கு தாக்கல் செய்வதற்குரிய பாதுகாப்பான சூழல் இருக்கவில்லை. அதனாலேயே இவ்வாறு காலம் தாழ்த்தி ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்ய நேர்ந்தது என்று மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி கு.குருபரன் தெரிவித்திருந்தார்.

இரு தரப்பினருக்குமே பாதுகாப்பு இல்லையா…………….?

யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்களில் 3 மனுக்களை மட்டுமே மேல் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அதேநேரம் கடந்த 2002 ஆம் ஆண்டு 9 பேர் தொடர்பாக யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும்;, அந்த வழக்கு விசாரணைகளில் இராணுவத்தினர் கலந்து கொள்வதற்குப் பாதுகாப்பு இருக்கவில்லை எனக் கூறி, அந்த வழக்குகள் அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் தொடர்பில் ஒத்துழைத்ததாகக் கூறப்படுகின்ற மனித உரிமைச் செயற்பாட்டாளராகிய 36 வயதுடைய பெண்ணும், அவருடைய 6 வயது மகனும் அடையாளம் தெரியாதவர்களினால் இரும்புக்கம்பி தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை பகுதியில் அவர்கள் வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டுத் திரும்புகையில் இடம்பெற்றிருக்கின்றது. இரும்புக்கம்பியினால் தலையில் தாக்கப்பட்டு, வீதியோரத்தில் கிடந்த இவரையும், அவருடைய மகனையும் கண்ட வழிப்போக்கர்கள், வட்டுக்கோட்டைகொட்டைக்காடு வைத்தியசாலையில் சேரத்துள்ளனர். அங்கிருந்து அந்தப் பெண் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் செயற்படுபவர்கள் மத்தியிலும் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதிகேட்டு போராடி வருபவர்கள் மத்தியிலும் இந்தச் சம்பவம் அதிரிச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

அதேவேளை, யாழ் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள 3 ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணைகளில் வழக்குத் தாக்கல் செய்துள்ளவர்கள் நீதிமன்ற பகுதியில் இராணுவ புலனாய்வாளர்களினால் அச்சுறுத்தப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புலனாய்வாளர்கள் தொடர்பில் கருத்துரைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சைத்திய குணசேகர, அவர்கள் தனது பாதுகாப்புக்காகவே வந்திருந்ததாகத் தெரிவித்திருந்தார்.

யாழ் மேல் நீதிமன்றத்திற்கு வருவதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த உயரதிகாரிக்கு பாதுகாப்பு இல்லை என்றே இதன் மூலம் தெரியவந்துள்ளது. அதேநேரம் காணாமல் போனோர் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதும் நீதிமன்றத்தின் கவனத்திற்குகு; கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக சாட்சிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம். ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்கும் நடவடிக்கையில் நீதியை நாடி வருபவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகுமாயின் அங்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகத்திற்கு உரியதாகிவிடும். முதலில் சாட்சிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் காணாமல் போனோர் அலுவலகத்தின் முன் சென்று பாதுகாப்பாக சாட்சியமளிக்க முடியுமா என்பதே இப்போது கேள்விக்குறியாகி இருக்கின்றது.

பொறுப்பு கூறும் விடயத்தில் நான்கு விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. உண்மையைக் கண்டறிதல், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்குதல், பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குதல், இத்தகைய நிலைமையொன்று மீண்டும் நிகழாமல் உறுதி செய்தல் ஆகிய நான்கு விடயங்களுக்கான பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டு அதனை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், என்ன நடந்தது என்ற உண்மையை;க கண்டறிவதற்கான ஆரம்பப் பொறிமுறையாகிய காணாமல் போனோர் அலுவலகம் என்ற பொறிமுறையே பல்வேறு சந்தேகக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றது. அத்துடன் இந்த அலுவலகத்தை நம்பத் தயாரில்லை என காணாமல் போனோரின் உறவினர்கள் உரத்துச் சொல்லியிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகள் நீதியை நிலைநாட்டத்;தக்க வகையில் உருவாக்கப்படுமா, அவற்றின் மூலம் நிலைமாறுகால நீதி கிடைக்குமா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது.

யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி மேலும் தாமதப்படுத்தப்படுவது என்பது நீதி முற்றாக மறுக்கப்படப் போகின்றது என்பதையே சுட்டிக்காட்டுவதாகக் கருத வேண்டியிருக்கின்றது.

Leave a comment