வட மாகாண சபை 19 உறுப்பினர்களுடன் அமர்வு

242 0

வடமாகாண போக்குவரத்து அமைச்சு தொடர்பில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமர்வில் வடமாகாண முதலமைச்சர் உட்பட ஏனைய 5 அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை.

வடக்கு மாகாண சபையின் 127 வது அமர்வின் விசேட அமர்வு இன்று (16) யாழ். கைதடியில் உள்ள பேரவைச்செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது.

வட மாகாண போக்குவரத்து அமைச்சு தொடர்பில், அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து அமைச்சரவை விடயத்தில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஆராயும் பொருட்டு 19 உறுப்பினர்கள் எழுத்து மூலம் விடுத்த வேண்டுகோளிற்கு அமைவாக இன்று விசேட அமர்வு நடைபெற்றது.

இவ்விடயம் உயர் நீதிமன்றில் உள்ள படியால் தான், இதில் கலந்து கொள்ளவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் புறக்கணிக்கணிப்பதாக, அவைத் தலைவருக்கு கடிதம் மூலம் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் மாகாண போக்குவரத்து அமைச்சரான பா. டெனீஸ்வரன் இவ் அமர்வில் கலந்து கொண்ட போதிலும் அவர் அங்கம் வகிக்கும் கட்சியான ரெலோ அமைப்பின் ஏனைய ஐந்து உறுப்பினர்களும் அமர்வில் கலந்து கொண்டிருந்த போதும், மேற்படி விவாதத்தில் தாம் பங்கு கொள்ளவில்லை என தெரிவித்து அமர்வில் இருந்து வெளியேறினர்.

அதைத் தொடர்ந்து அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் இந்த விசேட அமர்வை ஆரம்பித்தார்.

ஏனைய மாகாண அமைச்சர்கள் எவரும் பங்கு கொண்டிராத நிலையில் 19 உறுப்பினர்களுடன் இந்த விவாதம் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment