வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனின் பெற்றோர் வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் நகை , பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
குடத்தனையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டினுள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12 .30 மணியளவில் உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த மாகாண சபை உறுப்பினரின் தந்தையார் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னர் கொள்ளையில் ஈடுபட்டனர்.
தாயரின் நகைகள் 6 பவுண் மற்றும் உண்டியலில் சேர்த்த சுமார் 40 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றை கொள்ளையடித்துள்ளனர்.
வீட்டினுள் சுமார் 45 நிமிடங்கள் தேடுதல் நடத்தியுள்ளனர். அத்துடன் வீட்டில் இருந்த மூன்று கையடக்க தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் அடித்து நொருக்கி விட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர்.
இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னாண்டோவின் சிறப்பு பொலிஸ் நடவடிக்கை வரும் 18ஆம் திகதிவரை நடைமுறையிலுள்ள நிலையில் இடம்பெற்ற மற்றொரு குற்றச்செயல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

