கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு எதிராக போராட்டத்தில்…

475 0

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு எதிராக கிளிநொச்சியில் இன்று காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினரின் மாவட்ட ரீதியான பொதுமக்களுடனான சந்திப்பு இன்று கிளிநொச்சியல் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கு தாம் இடையூறு விளைவிக்க மாட்டோம் எனவும், இந்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் அலுவலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் மக்கள் கருத்தறியும் அமர்வு நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியளாலர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளது.குறித்த சந்திப்பின்போது ஆணைக்குழுவிலுள்ள 10ற்கும் மேற்பட்ட ஆணையாளர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவ் ஆணையாளர்கள் காணாமற்போனோரின் உறவுகள், சிவில் சமூக உறுப்பினர்கள், ஆர்வலர்கள், ஊடகவியலார்கள் ஆகியோரை நேரடியாக சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் திட்டமிடல் மற்றும் வரையறைகள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது.இது தொடர்பில் பொதுமக்கள் நேரடியாக கேள்வியெழுப்ப முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகம் கடந்த மே மாதம் முதல் மாவட்ட ரீதியான பொதுமக்களுடனான சந்திப்பை ஆரம்பித்திருந்தது.ஏற்கெனவே மன்னார், மாத்தறை, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பிராந்திய கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு நிறைவடைந்துள்ளன.

இந்த நிலையில், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தனது மாவட்ட ரீதியான பொதுமக்களுடனான சந்திப்பை இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச்சபை மண்டபத்தில் நடத்தி வருகின்றது.

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும், சரணடைந்தும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என பதில் வழங்குமாறு கோரி கடந்த வருடம் மாசி மாதம் 20ஆம் திகதி கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் ஆரம்பித்த போராட்டம் இன்று 511 ஆவது நாளாக இடம்பெற்று வருகிறது.

Leave a comment