பாகிஸ்தானில் வேட்பாளரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் – 4 பேர் உயிரிழப்பு!

215 0

பாகிஸ்தானில் முத்தாஹிதா இ அமால் கட்சியின் வேட்பாளரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த பிரச்சாரத்தின்போது பல்வேறு கட்சியின் அரசியல் தலைவர்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக பட்டியல் வெளியிட்டு, தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது. பட்டியலில் உள்ள தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் ஜாமியத் உலமா இ இஸ்லாம் பாசில் தலைவர் அக்ரம் கான் துர்ரானியும் ஒருவர்.

இந்நிலையில், கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் அக்ரம் கான் துர்ரானி இன்று காலை பிரசாரத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது, பன்னு நகரில் அவரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது வாகன அணி வகுப்பிற்கு மிக அருகாமையில் குண்டு வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 14 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலில் துர்ரானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி பொதுக்கூட்டம் நடைபெற உள்ள பகுதியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

முன்னாள் பிரதமர் அப்பாசி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த துர்ரானி, வரும் தேர்தலில் முத்தாஹிதா இ அமால் கட்சி சார்பில் பன்னு தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் போட்டியிடுகிறார்.

Leave a comment