Breaking News
Home / கட்டுரை / வடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்! -பி.மாணிக்கவாசகம்

வடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்! -பி.மாணிக்கவாசகம்

உள்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள விஜயகலா விவகாரம், இலகுவில் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. பல்வேறு பரிமாணங்களில் பலதரப்பட்ட கேள்விகளை அது எழுப்பியிருந்தது. பலரையும் பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதற்கு நிர்ப்பந்திருக்கின்றது. இவைகள் அவருக்கு ஆதரவானது என்றும், அவருக்கு எதிரானது என்றும் இரண்டு வகையில் அமைந்திருக்கின்றன.

அரசியல் கொள்கைகள், அரசியல் கட்சிகளின் எல்லைகள் என்பவற்றைக் கடந்து, பொதுமக்களின் நலன்கள் சார்ந்து இந்த நிலைமைகள் உருவாகியிருக்கின்றன என்பது முக்கியமானது. அதேவேளை, கட்சிக் கொள்கைகள் கட்சி அரசியல் நிலைப்பாடுகளுக்கு உட்பட்டு, விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற செயற்பாடுகளும் முனைப்பு பெற்றிருப்பதையும் காண முடிகின்றது.

அரசாங்கத்தின் அமைச்சர், கூட்டு அரசாங்கத்தின் அங்கத்துவ கட்சியின் ஒரு முக்கியஸ்தர் என்ற வகையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வில அவர்; வெளியிட்ட கருத்துக்கள் விசேடமாக நோக்கப்படுகின்றன. அந்த வகையில் அவை தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மிதவாத அரசியல் சக்திகள் மட்டுமல்லாமல் இனவாதம் கொண்ட தீவிரவாதப் போக்கைக் கொண்ட அரசியல் சக்திகளும் இந்த வகையில் விஜயகலா விவகாரத்தை அணுகி, அதனைக் கையாள முயற்சித்திருக்கின்றன.

அரசாங்கத்திற்கு விரோதமான கருத்து என்பதிலும் பார்க்க, விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாகவே கருதுகின்ற அரசியல் கொள்கை நிலைப்பாட்டிலேயே அரச தரப்பினராலும், சிங்கள பௌத்த தீவிரவாத அரசியல் தரப்பினராலும் அவருடைய விவகாரம் கையாளப்படுகின்றது. அந்த அரச நிகழ்வில் அமைச்சர் என்ற அந்தஸ்தில் அவர் எப்படி அவ்வாறு நடந்து கொள்ள முடியும் என்ற தோரணையிலேயே இது அமைந்துள்ளது. இந்த வகையிலேயே விஜயகலா விவகாரம் விவாதிக்கப்படுகின்றது. விமர்சிக்கப்படுகின்றது. இந்த அடிப்படையிலேயே அவர் சட்டத்தை எந்தெந்த வகைகளில் மீறியுள்ளார் என்பது தொடர்பான சட்ட விளக்கங்கள் சட்டமா அதிபரிடம் கோரப்பட்டிருக்கின்றது. மறுபக்கத்தில் ஏதோ ஒரு குற்றவாளியைப் போன்று, அவரை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

நாடு பொருளாதார ரீதியாக மோசமாகப் பின்னடைந்துள்ளது. யுத்தம் காரணமாக ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பில் இருந்து அது இன்னும் மீளவில்லை. யுத்தம் முடிவுக்கு வந்து ஒன்பது வருடங்கள் கழிந்துவிட்ட போதிலும், யுத்தம் காரணமாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு நாடு அல்லாடிக் கொண்டிருக்கின்றது.

அளவுக்கு மிஞ்சிய கடன் தொல்லைக்கு ஆளாகி, கடன்காரர்களின் அழுத்தங்களுக்குத் தொடர்ச்சியாக முகம் கொடுக்க வேண்டிய அவல நிலைக்கு அரசாங்கம் ஆளாகியிருக்கின்றது. பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைவதற்குப் பதிலாக வீழ்;ச்சி அடைந்த நிலையிலும் தேசிய பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட பாரிய வேலைத்திட்டங்களில் ஊழலும் மோசடிகளும் தாரளாமாகவே இடம்பெற்றிருந்தன. அவற்றுக்கு முடிவுகண்டு நாட்டின் பொருளாதாரத்தை நிமிரச் செய்வதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கத்தினால் இன்னுமே முடியாமல் இருக்கின்றது.

யுத்தம் முடிந்த பின்னரும்கூட, உள்நாட்டில் யுத்தமோதல்கள் உருவாகுவதற்கு அடிப்படையான இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இதயசுத்தியுடன் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால் ஏகப்பட்ட அரசியல் பிரச்சினைகள் தீர்வு காணப்படுவதற்காகக் குவிந்து கிடக்கின்றன. மறுபக்கத்தில் யுத்தமோதல்களின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் என்பவற்றுக்கு பொறுப்பு கூற வேண்டிய சர்வதேச கடப்பாடுகளும் அரசாங்கத்தை அழுத்திக் கொண்டிருக்கின்றன.

மீளுருவாக்கம்

இத்தகைய ஒரு பின்னணியில்தான், வடக்கில் சட்டம் ஒழுங்கு சீராக நடைமுறைப்படுத்தப்படவில்லை. பொதுமக்களின் பாதுகாப்பு பாதிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக சிறுமிகள் முதல் பெரியோர் வரையிலான பெண்கள் காட்டுமிராண்டித்தனமான பாலியல் வன்முறைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் ஆளாகியிருக்கின்றார்கள் என்பதை அமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்த விஜயகலா, யாழ் வீரசிங்கம் மண்டப அரச நிகழ்வில் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த அமைச்சர்களின் முன்னிலையில் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்திருந்தார்.

நாட்டு மக்களுடைய ஏகோபித்த ஆதரவையும், எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் நிறைந்த தமிழ் மக்களின் பேராதரவையும் பெற்று, அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள அரசாங்கம் மோசமான குற்றவாளிகளிடமிருந்தும், கொடூரமான சமூகவிரோதிகளிடமிருந்தும் அந்த மக்களை பாதுகாக்கத் தவறியிருக்கின்றது என்று இடித்துரைத்திருந்தார். அத்துடன் யுத்தமோதல்களின் மத்தியில் உயிரச்சுறுத்தல் மிகுந்த சூழலிலும்கூட, விடுதலைப்புலிகள் பொதுப் பாதுகாப்பையும், பெண்களின் பாதுகாப்பையும் நேர்த்தியாகப் பேணியிருந்தார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நிலைமையை சீர்செய்வதற்கு விடுதலைப்புலிகள் இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்ற தொனியில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

அது மட்டுமல்லாமல், ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு தேர்தலில் ஆதரவு வழங்கிய தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் அக்கறையுடன் செயற்படவில்லை. அந்த மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மாறாக அவர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதையும், விடுதலைப்புலிகளின் காலத்தில் நிலைமை அவ்வாறு இருக்கவில்லை. சிறப்பாக இருந்தது என்பதையும் அவர் எடுத்துக் காட்டியிருந்தார். அந்த நிகழ்வில் சமூகமளித்திருந்தவர்கள் கூடியிருந்தவர்கள் கைதட்டி, அவருடைய கருத்துக்களுக்கு வரவேற்பு அளித்திருந்தார்கள். அந்த வரவேற்பு அவருடைய கூற்றுக்கு அங்கீகாரமளிப்பதைப் போ அமைந்திருந்தது.

ஆனால், கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் அவர் வெளியிட்டிருந்த கருத்துக்கள் பயங்கரவாதத்தை மீளுருவாக்கம் செய்கின்ற நோக்கத்தைக் கொண்டிருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கி;ன்றது. பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகள் ஒழிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களை வடக்கிலும் கிழக்கிலும் செயற்படத் தூண்டும் வகையில் அவர் உரையாற்றியிருந்தார். எனவே தடைசெய்யப்பட்டதும், ஒழிக்கப்பட்டதுமான விடுதலைப்புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்யும் நோக்கத்தில் செயற்பட்டிருந்தார் என குறிப்பிட்டு, அதற்காக அவரைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தென்னிலங்கையில் எழுந்திருக்கின்றது. அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்ற அழுத்தங்களும் அரசாங்கத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

யாழ் வீரசிங்க மண்டப நிகழ்வையடுத்து, அவசரமாகக் கொழும்புக்குச் சென்ற அவர், ஐக்;கிய தேசிய கட்சியின் தலைவரும், பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தபோது, அவரை தற்காலிகமக அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில் அவரே தனது அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்திருந்தார். அவர் தனது அமைச்சர் பதவியைத் துறந்த போதிலும், பயங்கரவாதத்திற்குத் துணைபோகும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றார் என்ற அவர் மீதான குற்றச்சாட்டின் வேகம் தணியவில்லை. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று, அவரை அரசியல் ரீதியாகப் பழிவாங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தளர்வேற்படவில்லை.

சர்வதேச நிலைமை

நாடாளுமன்றத்திலும், விஜயகலா விவகாரம் சூடுபிடித்து, உள்நாட்டில் ஓர் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கின்ற சூழலில், சர்வதேச அளவில் இந்த விடயம் இராஜதந்திரிகள் மட்டத்திலும், ஜனநாயகம், மனித உரிமை, கருத்துச் சுதந்திரம் என்பவற்றில் அதிக ஈடுபாடு கொண்ட நாடுகளின் உயர் மட்டங்களிலும் பரபரப்பையும் இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலைமைகள் குறித்து, பல்வேறு தரப்பினரும் பல்வேறு வழிகளில் சர்வதேச நாடுகளுக்கும், இலங்கை விடயத்தில் ஆர்வமுள்ள சர்வதேச அரசுகளுக்கும், இராஜதந்திரிகளுக்கும் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார்கள்.

அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் அவர்களுடைய பிரதிநிதிகளாகக் கருதப்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில், கூட்டமைப்பின் தலைவரும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன், குறிப்பாக கூட்டமைப்பின் சர்வதேச விவகாரங்களைக் கையாள்பவரும், கூட்டமைப்பின் பேச்சரளருமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரும் வடமாகாண முதலசை;சர் சி.வி.விக்னேஸ்வரனும் தங்கள் பங்கிற்கு நிலைமைகள் குறித்தும், தமிழ் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும் சர்வதேசத்திற்கு எடுத்துரைத்திருக்கின்றார்கள்

அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி, ஆட்சியாளர்களுக்கு அழுத்தங்களோ பிரச்ச்னைகளோ ஏற்பட்டுவிடக் கூடாது என்று அரசியல் ரீதியாகச் செயற்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கருத்துக்கள் கள நிலைமைகளை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தியிருக்கும் என்று கூற முடியாது. இருப்பினும் கூட்டமைப்பின் ஊடாகவும் நிலைமைகள் குறித்த தகவல்களை சர்வதேசம் பெற்றிருந்தது என்பதில் சந்தேகமில்லை.

இத்தகைய ஒரு பின்னணியில் அரசாங்கத்தின் முக்கியஸ்தரும், அமைச்சருமாகிய விஜயகலா அரச நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்த கருத்துக்கள் சர்வதேசத்தை ஒருவகையில் அதிர்ச்சியடையச் செய்திருப்பதாகவே இராஜதந்திரிகள் கூறுகின்றார்கள். பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டவர்களும், அரசியல்வாதிகளும் தெரிவிக்கின்ற கருத்துக்களில் உண்மை நிலைமையை அறிந்துள்ள போதிலும், அரசாங்கத்தின் முக்கிஸ்தர் ஒருவர் உணர்வுபூர்வமாக, அரசியல் நிலைப்பாட்டைக் கடந்த நிலையில் தெரிவி;த்துள்ள கருத்துக்கள் சர்வதேசத்தின் கவனத்தைத் தீவிரமாக ஈர்த்திருக்கின்றன.

ஒரு சாதாரண அரசியல்வாதி அல்லது அரசாங்கத்தின் பங்காளர் என்ற நிலையைக் கடந்து, பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக உணர்வுபூர்வமாக வெளிப்படுத்திய கருத்துக்களில் மறைந்துள்ள உண்மையான நிலைமைகளை சர்வதேசம் கூர்ந்து கவனித்துள்ளது. அமைச்சர் ஒருவரே மோசமடைந்துள்ள நிலைமைகளின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் கொட்டித்தீர்த்திருக்கின்றார் என்றே சர்வதேசம் கருதுகின்றது. அந்த வகையில் தாங்கள் ஏற்கனவே கள நிலைமைகள் குறித்து அறிந்துள்ளதிலும்பார்க்க நிலைமை மோசமாக இருப்பதை சர்வதேச நாடுகள் உணர்ந்திருக்கின்றன. சர்வதேச இராஜதந்திரிகளும் உணர்ந்துள்ளார்கள்.

வடக்கு கிழக்கில் சட்டம் ஒழுங்கு மோசமான முறையில் சீர்குலைந்துள்ளது. ஆட்சி நிர்வாகக் கட்டமைப்புக்களும் பொறிமுறைகளும் வலுவிழந்திருக்கின்றன. அல்லது வேண்டும் என்றே வலுவிழக்கச் செய்யப்பட்டிருக்கின்றன. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் கைவிடப்பட்டிருக்கின்றன. மலைபோல குவிந்துள்ள பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அக்கறையற்ற ஆட்சிப் போக்கு காணப்படுகின்றது என பலவகைப்பட்ட நிலைகளில் அங்குள்ள நிலைமைகளை ஆழமாக அமைச்சர் விஜயகலா வெளிப்படுத்தியிருப்பதாகவே சர்வதேச மட்டத்தில் கருதப்படுகின்றது.

மனித உரிமை மீறல்களுக்கும் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கும் பொறுப்பு கூறுவதை அரசு தட்டிக்கழித்து வருவதை ஏற்கனவே தெளிவாக உணர்ந்தள்ள சர்வதேசம், உள்ளுரில் ஆட்சி நிர்வாகத்திலும் தனது பொறுப்புக்களை, சரியான முறையில் நிறைவேற்றத் தவறியிருக்கின்றது என்பதை அறிந்து கொண்டுள்வதற்கு விஜயகலா விவகாரம் வழிவகுத்துள்ளது.

ஜனநாயகம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்

யுத்தத்தில் வெற்றியடைந்ததன் பின்னர் இலங்கையில் ஜனநாயகத்திற்கு ஊறு ஏற்பட்டு, எதேச்சதிகாரம் தலையெடுத்திருந்ததன் காரணமாகவே, 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குத் துணையாக சர்வதேசம் திரைமறைவில் இருந்து செயற்பட்டிருந்தது. ஆனால் நல்லாட்சி அரசு என்று கருதப்பட்ட புதிய அரசாங்கம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலும், மனித உரிமைகளைப் பேணுவதிலும் அக்கறையோடு செயற்படவில்லை என்ற சர்வதேசத்தின் அதிருப்தி உணர்வை மேலும் அதிகப்படுத்தவதற்கே விஜயகலா விவகாரம் வழிவகுத்துள்ளது.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையடுத்து எழுந்துள்ள நிலைமைகள் குறித்தும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்ற யதார்த்தமான கள நிலைமையையும் எடுத்துரைத்த விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கே அரசும், ஏனைய அரசியல் சக்கதிகளும் துணிந்திருந்தன. ஆனால் சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கான உயர் மட்ட நடவடிக்கைகளில் உடனடியாகக் கவனம் செலுத்தவில்லை என்பதை சர்வதேசம் கவனத்திற் கொண்டுள்ளதாக இராஜதந்திர வட்;டாரங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

குறைபாடுகளைக் கொண்ட ஆட்சி நிர்வாகத்திற்குப் பொறுப்பானவர்கள் எவரும் தமது திறமையின்மை குறித்து கவலை தெரிவிக்கவோ தமது பதவி விலகவோ முற்படவில்லை. ஆனால், நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றன என்று பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்த அமைச்சர் பதவி விலகியிருப்பதைக் கண்டு இராஜதந்திரிகளும் சர்வதேச அளவில் ஜனாநாயகத்திற்காகக் குரல் கொடுத்துச் செயற்படுகின்ற சக்திகளும் திகைப்படைந்துள்ளதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

குறைகள் பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்பிய அமைச்சர் பதவியைத் துறந்த பின்னரும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும், அரசியல் ரீதியாக அவரைப் பழிவாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதும்கூட சர்தேசத்தை முகம் சுழிக்கச் செய்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

விஜயகலா அமைச்சுப் பொறுப்பில் இருந்து பதவி விலகிய பின்னரும், அவருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கத் துணிந்திருப்பதை ஜனநாயகத்திற்காகச் செயற்பட்டு வருகின்ற சர்வதேச சக்திகள் ஒரு ஜனநாயக விரோதச் செயற்பாடாகவே நோக்கியிருக்கின்றன. அதேவேளை, பொதுமக்கள் அனுபவித்து வருகின்ற கஸ்டங்களையும், பொது பாதுகாப்புக்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சீர்குலைவுக்காகக் குரல் கொடுத்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதானது, அமைச்சர் என்ற ரீதியில் அதிகாரமுள்ள ஒருவருடைய கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் கைவைத்த நடவடிககையாகவே சர்வதேச மட்டத்திலான ஜனநாயக சக்திகளின் மத்தியில் கருதப்படுகின்றது.

மொத்தத்தில் விஜயகலா விவகாரம் என்பது உள்நாட்டு அரசியலில் பலதரப்பினரையும் அரசியல் ரீதியாகப் புரட்டிப் போட்டது மட்டுமல்லாமல், ஜனநாயகம், மனித உரிமைகள், பேச்சுச்சுதந்திரம் என்ற மக்கள் ஆட்சிக்குரிய பண்புகளில் இருந்து அரசு விலகிச் செல்கின்றது என்ற மனப்பதிவையே சர்வதேச அளவில் ஏற்படுத்தியிருக்கின்றது.

இது, முன்னைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் வழியொட்டி, நல்லாட்சி அரசாங்கமும், சீனாவுடன் நெருக்கமான இராஜதந்திர உறவுகளை மேற்கொள்ள முயற்சித்துள்ள பி;னனணியில் அரசு மீது சர்வதேசம் தனது பிடியை வேறு வேறு தளங்களில் இறுக்குவதற்கு வழி சமைத்திருப்பதையே காண முடிகின்றது.

 

About ஸ்ரீதா

மேலும்

இந்தக் குழந்தைகள் என்ன செய்தனர்?

போரின் வலியை, அது விட்டுச்சென்ற மானுடப் பேரவலத்தை, இனிவரும் காலம் முழுவதும் தமிழ்த் தலைமுறை சுமக்கப்போகிறது. போரின் உள வடுவும் …