உலக கோப்பை கால்பந்து போட்டி; பிரான்சில் பட்டாசுகள் வெடித்து ஏற்பட்ட நெரிசலால் 27 பேர் காயம்

313 0
உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது.  லீக், ‘நாக்-அவுட்’ மற்றும் கால் இறுதி சுற்று ஆட்டங்கள் முடிவில் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.

இதில் முதலாவது அரை இறுதிப்போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நேற்றிரவு 11.30 மணிக்கு தொடங்கியது. இதில் உலக தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள பிரான்ஸ் மற்றும் 3வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தை எதிர்கொண்டது.
இந்நிலையில் முதல் அரையிறுதி போட்டியின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை.
அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் உம்திதி 1 கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இதனை சமன் செய்ய பெல்ஜியம் அணி வீரர்கள் கடுமையாக போராடினார்கள்.
ஆனால் இறுதிவரை பெல்ஜியம் அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை. இதன்மூலம் பெல்ஜியம் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த நிலையில் போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெறுவது உறுதியான நிலையில் போட்டி முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் இருந்த கால்பந்து ரசிகர்கள் பட்டாசுகளை வெடிக்க செய்துள்ளனர்.
இதனால் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் சிதறி ஓடியுள்ளனர்.  இந்த நெரிசலில் சிக்கி 27 பேர் காயமடைந்து உள்ளனர் என தெரிய வந்து உள்ளது.
கடந்த 2 வருடங்களுக்கு முன் பிரான்சில் நடந்த தேசிய தின கொண்டாட்டத்தில் ஐ.எஸ். தீவிரவாதி ஒருவன் குளிர்சாதன பெட்டிகளை ஏற்றி கொண்டு சென்று கூட்டத்தில் மோத செய்ததில் 86 பேர் கொல்லப்பட்டனர்.  அதனை நினைவுப்படுத்தும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Leave a comment