பேரறிவாளன் தாக்கப்பட்டதன் பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும்

313 0

201609151207411442_vaiko-says-will-have-to-investigate-perarivalan-attack_secvpfவேலூர் சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்டதன் பின்னணி குறித்து உரிய விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.அண்ணா பிறந்தநாளையொட்டி திருச்சியில் இன்று ம.தி.மு.க. சார்பில் மாநாடு நடக்கிறது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகிறார். முன்னதாக அவர் இன்று காலை சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்று மகிழ்ச்சிகரமான நாள். பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை கடைபிடிக்கும் ஒரே இயக்கமாக ம.தி.மு.க. விளங்கி வருகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாளையொட்டி ம.தி.மு.க. சார்பில் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு மாநாடு திருச்சியில் இன்று நடத்தப்படுகிறது.

தமிழகத்தை இன்று நாலாபுறமும் ஆபத்து சூழ்ந்திருக்கிறது. காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. கர்நாடகா அக்கிரமம் செய்கிறது. இதனால் தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்சனையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

காவிரியில் தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்கவும், ஈழத்தின் விடியலுக்காகவும் திருச்சியில் மாநாடு நடைபெறுகிறது. செய்யாத குற்றத்துக்காக பேரறிவாளன் 25 வருடங்களாக சிறையில் இருந்து வருகிறார். வேலூர் சிறையில் அவர் தாக்கப்பட்டதன் பின்னணி குறித்து உரிய விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும். மேலும் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு 3 மாதம் பரோலில் விடுதலை செய்ய வேண்டும். தமிழகத்தில் நாளை நடைபெறும் போராட்டத்திற்கு ம.தி.மு.க. முழு ஆதரவு அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.