மாகாண சபைத் தேர்தலை விகிதாசார முறையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதற்கு கூட்டு எதிர்க்கட்சி பூரண ஆதரவு வழங்குவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கலப்புத் தேர்தல் முறையில் பல குறைபாடுகள் உள்ளதை கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்டுகொள்ள முடிந்தது. அத்தேர்தல் முறையிலுள்ள குறைபாடுகளை காரணம் காட்டி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரையில் மாகாண சபைத்தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.
எனினும் பதவிக்காலம் முடிவடைந்துள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் உடனடியாக நடத்த வேண்டும். அத்துடன் புதிய தேர்தல் முறையில் சிக்கல் உள்ளதால் பழைய விகிதாசார முறையில் தேர்தலை நடத்துமாறு சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் அரசாங்கத்தைக் கோரியுள்ளன. கலப்புத் தேர்தல் முறை தமக்கு அநீதி ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அத்தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆகவே அரசாங்கம் எக்காரணங்களையும் அடிப்படையாக்கொண்டு மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கக் கூடாது. எனவே ஏற்கெனவே அமுலிலிருந்த விகிதாசார முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்காக எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் அதன் அறிக்கை இன்னும் பாராளுமன்றிற்கு சமர்ப்பிக்கவில்லை. அத்துடன் கலப்பு தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏற்பட்ட சிக்கலை விடவும் பாரியளவில் சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.
எனவே அரசாங்கத்திற்கும் புதிய முறையில் தேர்தல் நடத்துவதற்கு விருப்பம் இல்லை. எனினும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் வரையில் மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

