தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைது செய்யுமாறு கோரி சிங்ஹல ராவய அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னின்று விஜயகலா மகேஸ்வரனின் அமைச்சு பதவியை இரத்து செய்ய வேண்டும் எனவும் பொலிஸார் அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் சிங்ஹல ராவய அமைப்பின் இணைப்புச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் தீர்வு கிடைக்கப்பெறவில்லையாயின் நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் சரியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.

