நல்லாட்சியில் மக்களுக்கு சேவை செய்யும் போது மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் போன்று ஹிட்லர் ஆட்சியை தாம் மேற்கொள்ளவில்லை எனபிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பின்தள்ளப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த மூன்று வருடத்திற்குள் சீர் செய்ய முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
பன்விலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கலா பொக்க பெருந்தோட்ட மக்களின் 500 காணிகளுக்கான உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்றுபிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஊடகங்கள் சில தம்மை திருடர்களாக சித்தரிப்பதாக குற்றஞ்சாட்டினார்.
‘இந்தப் பிரதேசத்தினைச் சேர்ந்த பெருந்தோட்ட மக்களுக்கு இன்று மகிழ்ச்சிக்குரிய நாளாகும். எமது நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான நோக்கம்அனைத்து இன மக்களும் சமாதானத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கு வழி வகுப்பதேயாகும்.
தமிழ் மக்களுக்கு காணிகள் வழங்கும் திட்டத்தைவிட மலையகத்தில் கிராமங்கள் அமைக்கும் திட்டமாகவே இதை நாம் கருதுகின்றோம். சிங்களமக்களுக்கும் இவ்வாறான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் பழனி திகாம்பரம் மலையக மக்களுக்கு காணிகளையும் வழங்கி வீடும் கட்டிக் கொடுக்கின்றார். இவ்வாறுமக்களுக்கான சேவைகளை செய்வதில் எமது நல்லாட்சி அரசாங்கம் என்றும் தயங்குவதில்லை.
ஆனால் ஊடகங்கள் எம்மைப் பற்றி குறை கூறியும் எம்மை திருடர் என்றும் சித்தரித்து வருகின்றனர். இன்றும் ஒரு பத்திரிகையில் என்னைத் திட்டி எழுதியிருந்தார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு சேவைகள் செய்யும் போது கடந்த ஆட்சிகாலத்தைப் போல ஹிட்லர் ஆட்சியை மேற்கொள்ளவில்லை.
எமது நாட்டின் பொருளாதார நிலையைப் பற்றி பேசுகின்றவர்கள் எமது நிலையைப் பற்றி நன்கு புறிந்துக் கொள்வது அவசியமாகும். கடந்த ஆட்சியின்போது முன்னாள் ஜனாதிபதியும் அவரது சகோதரரும் பெற்ற கடன்களையும் இன்று நாமே மீளச் செழுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குதள்ளப்பட்டுள்ளோம்.

