முதலமைச்சரை யாரோ பிழையாக வழிநடாத்தி இருக்கிறார்கள் – ப.சத்தியலிங்கம்

238 0

முதலமைச்சரை யாரோ பிழையாக வழிநடாத்தி இருக்கிறார்கள்.அந்த பிழையான வழிநடத்தலை கேட்டமையால் வந்தது தான் இந்த விளைவு என்று முன்னாள் சுகாதார அமைச்சரும் வட மாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். தனது நிதியலிருந்து வாழ்வாதார உதவிகளை இன்று வழங்கி வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்

எனது நிதியிலிருந்து கூடுதலான நிதி கல்விக்கும் குடும்ப பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்காகவுமே வழங்கப்பட்டு வருகின்றது.எமது சமூகம் முன்னுக்கு வரவேண்டுமாக இருந்தால் கல்வியிலே சிறந்து விளங்கவேண்டிய தேவை இருக்கின்றது.அதே போல மற்றவரிடம் கை ஏந்துகின்ற நிலைமையை தவிர்த்து நாமே உழைத்து வாழ்வோமாக இருந்தால் இந்த நாட்டிலே தமிழ்பேசுகின்ற எங்களை யாருமே அழிக்கமுடியாத நிலமை உருவாகும்.

இன்று மாகாணசபை என்ன செய்தது என்று கேட்பவர்கள் பலர் எம் மத்தியில் இருக்கின்றனர். மாகணசபை நிறைய விடயங்களை செய்திருக்கின்றது அதனை நாம் விடியும் வரை உங்களுக்கு சொல்லலாம். ஆனால் இந்த 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 வருடங்களில் எதனையும் செய்துவிடமுடியாது. மாகாணசபை எவ்வளவோ செய்திருந்தாலும் எமக்கிருக்கும் தேவைகளோடு ஒப்பிடுகையில் அது போதாமல் தான் இருக்கின்றது.இந்த சபை இன்னும் சிறப்பாக செயற்பட்டிருக்கலாம் என்பதும் உண்மை.

நான் சுகாதார அமைச்சராகவிருந்து நிறைய வேலைத்திட்டங்களை செய்திருக்கின்றேன் வவுனியாவில் மாத்திரம் 6 புதிய வைத்தியசாலைகள் அமைத்திருக்கிறோம். வவுனியா வரலாற்றிலேயே 4 வருடத்தில் 6 வைத்தியசாலைகள் ஒரு போதும் அமைக்கப்பட்டிருக்கவில்லை.வவுனியா வைத்தியசாலைக்கு பல கோடி ரூபாய்கள் ஒதுக்கி இருக்கிறோம் பல வேலைகள் நடைபெற்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையிலேயே வடமாகாண அமைச்சர்கள் ஊழல் செய்தவர்கள் என்று வடமாகாண முதலமைச்சர் விசாரணை ஒன்றை மேற்கொண்டார். 4 அமைச்சர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் இரு அமைச்சர்கள் சேவையில் தொடரலாம் என அந்த விசாரணைக் குழுவின் அறிக்கை வந்தது. அது நானும் டெனிஸ்வரனுமாகும்.ஏனைய இரண்டு அமைச்சர்களுக்கும் மேலதிக விசாரணைகள் தேவை என்று வந்தது. ஆனால் முதலமைச்சர் ஐயா யார் சொல்லி கேட்டாரோ இல்லை கனவு கண்டாரோ தெரியவில்லை குறித்த நான்கு பேரையும் பதவி; விலகுமாறு முடிவெடுத்து அவர் அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு புறம்பாக ;அவர்களை சேவையில் இருந்து இடைநிறுத்தினார்.

சும்மா கூறி இருந்தாலே நாம் போயிருப்போம். ஆனால் எம்மை கள்ளனாக்கி வெளியேற்றியமை எம்மைப் பொறுத்த வரைக்கும் மன வேதனையான விடயமே. எம்மோடு இருந்த அமைச்சர் ஒருவர் தன்னை அமைச்சர் பதவியில் அருந்து நீக்கியமை பிழை என்று நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்குக்கான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது முதலமைச்சர் குறித்த அமைச்சரை பதவி நீக்கிய விதம் பிழை உடனடியாக அவருக்கு அமைச்சு பதவியை வழங்கவேண்டும் என்று நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

முதலமைச்சர் ஒரு நீதியரசர். அவருக்கு சட்டம் தெரியாமலில்லை. ஒரு இருதய சிகிச்சை நிபுணருக்கு இருதயம் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. எனவே ஒரு அமைச்சரை பதவி நீக்குவதற்குரிய சட்டம் அவருக்கு தெரியாமல் இருப்பதற்கு வழியில்லை, ஆனால் அவரை பிழையாக யாரோ வழிநடாத்தி இருக்கிறார்கள்.அந்த பிழையான வழிநடத்தலை கேட்டதன் மூலம் வந்தது தான் இந்த விளைவு. ஆனால் அமைச்சராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கான சேவையை செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.

Leave a comment