புதினுடனான சந்திப்பின் போது அமெரிக்க தேர்தலில் தலையீடு குறித்து பேசுவேன் – டொனால்டு டிரம்ப் தகவல்

216 0

புதினுடனான சந்திப்பின் போது அமெரிக்க தேர்தலில் தலையீடு குறித்து பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவிதுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து ராபர்ட் முல்லர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த குற்றச்சாட்டை தொடக்கத்தில் இருந்தே மறுத்து வரும் டிரம்ப், விசாரணை கமிஷனையும் குறைகூறி வருகிறார். இந்த புகாரை ரஷியாவும் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினை வருகிற 16-ந்தேதி பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் டிரம்ப் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, அமெரிக்க தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து பேசுவீர்களா? என டிரம்பிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘நான் அவரிடம் (புதின்) அனைத்து விஷயங்கள் குறித்தும் பேசுவேன். தேர்தல்கள் குறித்தும் நாங்கள் பேசுவோம். அமெரிக்க தேர்தலை யாரும் சீர்குலைப்பதை நாங்கள் விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.

உக்ரைனை இணைத்துக்கொண்டது, சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டு வருவது போன்ற ரஷியாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், புதினுடனான சந்திப்பில் இந்த விஷயங்கள் குறித்தும் பேச இருப்பதாக டிரம்ப் கூறினார்.

இதைப்போல ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரிவிதிப்பது குறித்து 3 அல்லது 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்று கூறிய டிரம்ப், உலக வர்த்தக அமைப்பில் இருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்தார்.

Leave a comment