அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதம்

293 0

prisonசிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் சிலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரங்களிலுள்ள குற்றச்சாட்டுக்களை குறைத்து அவர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்துவதற்கு இந்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கடந்த ஒகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார்.

குறித்த காலக்கெடு நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், புனர்வாழ்விற்கு உட்படுத்தி விடுதலை செய்யப்படவுள்ள அரசியல் கைதிகளின் விபரங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து இன்னமும் தனக்குக் கிடைக்கப்பெறவில்லையென, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

இந்நிலையில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதியளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் எதிர்வரும் சில நாட்களில் உண்ணாவிரத போராட்டத்தை அரசியல் கைதிகள் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக, அவர்களை நேரில் சென்று சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

இதேவேளை, விடுதலை செய்யப்படும் அரசியல் கைதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.