சீனா இராணுவம் இலங்கைக்குவராது- ரணில்

208 0

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமையினால் சீனாவின் இராணுவம் ஆக்கிரமிக்கும் என பலர் கூறுகின்றனர். என்றாலும் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வணிக நோக்குடனே வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அதனால் சீன இராணுவம் இலங்கைக்கு வராது . அதன் ஆதிக்கமும் இருக்காது . எமது பாதுகாப்பு படையே அங்கு முகாமிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்

சீரழிந்த நாட்டை நாம் பொறுப்பேற்று ஜனநாயகம்  மனித உரிமை நிலை நாட்டினோம். இதன்ஊடாக இலங்கைக்கு இருந்த பிரதான சவாலை வெற்றிக்கொண்டோம். அதனை அடுத்து பொருளாதார ரீதியான சவால்களை வெற்றிக்கொள்ள முயற்சித்து வருகின்றோம்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும். இந்து சமுத்திரத்தின் மையமாக இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொருளாதார துறையில் முன்னேற்றம் காண வேண்டும். இதன்ஊடாக வெளிநாட்டு முதலீடுகளை நாம் அதிகரிக்க வேண்டும். ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க வேண்டும். ஆகவே இதற்கு தனியார் துறையின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.

அத்துடன் அம்பாந்தோட்டை துறைமுகத்தை தற்போது சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளோம். நீர் தடாகமாக இருந்த துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமையின் ஊடாக வளர்ச்சி அடைந்த துறைமுகமாக அதனை மாற்றி அமைக்கவுள்ளோம். அம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி தற்போது கப்பல் வர ஆரம்பித்துள்ளன. அடுத்த வருடமாகும் போது இயக்கத்துடன் கூடிய துறைமுகமாக அது மாற்றம் காணும்.

என்றாலும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமையினால் சீனாவின் இராணுவத்தினர் இலங்கை வந்தால் என்ன நடக்கும் என என்னிடம் ஒரு சிலர் தனிப்பட்ட ரீதியிலும் கேட்டனர்.அதற்கு அப்படி நடக்காது என்று கூறினேன். அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வணிக நோக்குடனே வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அதனால் சீனா இராணுவம் இலங்கைக்கு வராது . தெற்கில் கடற்படை தளம் அம்பாந்தோட்டையில் அமைக்கப்படும். ஆகவே எமது பாதுகாப்பு படையினரே துறைமுகத்தில் முகாமிடுவர். சீனாவின் இராணுவத்தினால் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஆகவே இந்த விடயத்தில் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றார்.

Leave a comment