ஒன்றிணைந்து போராடினால்தான் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென உணர்த்தியவர் தலைவர் பிரபாகரனே

316 0

prabahakaranதமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடினால்தான் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென உணர்த்தியவர் தலைவர் பிரபாகரனே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலருக்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக்கழகத்தின் 44வது ஆண்டு நிறைவு தினம் நேற்று (செவ்வாய்க் கிழமை) கொண்டாடப்பட்டதுடன் யுத்த காலத்தில் குறித்த கிராமத்தில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியொன்றும் நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்,

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

”நாம் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் இராஜதந்திர ரீதியாக சர்வதேசத்தினை ஈர்த்தவண்ணம் உள்ளோம். நாம் பல போராட்டங்களை நடாத்தியுள்ள போதிலும் இன்றுவரை எமக்கான உரிமைகள் கிடைக்கப்பெறவில்லை. நாங்கள் எதற்காக போராடினோமோ அந்த இலக்கு இன்று வரையில் எட்டப்படவில்லை.

தமிழ் மக்கள் பல இழப்புகளை சந்தித்தும் நிர்க்கதியாக நிற்கும் நிலையிலும் ஒற்றுமையீனம் என்பது தொடர்வது வேதனையானது. யார் குற்றினாலும் அரிசியாக வேண்டும் என்ற எண்ணப்பாடு எங்கள் மத்தியில் இல்லை. ஒரு அரசியல்வாதி ஒரு நல்ல விடயத்தினை செய்யும் போது அதற்கு முட்டுக்கட்டையாக பலர் செயற்படுகின்றனர்.

கடந்த 2001ஆம் ஆண்டிற்கு முன்னர் இயக்கங்களுக்குள் ஒற்றுமையில்லாத நிலையே இருந்தது. ஆனால் 2001ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த ஒற்றுமையீனத்தை உணர்ந்து கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து ஒரு குடையின் கீழ் அனைவரும் ஓரணியாக போராடினால்தான் தமிழ் மக்களின் உரிமைகளை பெறமுடியும் என்ற நோக்குடன் அனைவரையும் இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கினார்.

இந்த அடிப்படையில்தான் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் தொடர்ந்து அஹிம்சை ரீதியாக போராடிவருகின்றோம்” என்றார்.