10 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது!

400 0
10 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. செய்தி மற்றும் சுற்றுலா துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம், 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்துவதற்காக, கடந்த மே மாதம் 29-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடியது. இதுவரை 13 நாட்கள் கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில், கடந்த 14-ந் தேதிக்கு பிறகு சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்த விடுமுறை நாட்களில், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளுக்கு சென்று வழக்கமான பணிகளை கவனித்து வந்தனர். 10 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சென்னை தலைமைச்செயலகம் வருகின்றனர்.
இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, சுற்றுலா – கலை மற்றும் பண்பாடு துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள்.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பேசுகிறார்கள். இறுதியாக தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் கள் வெளியிடுகிறார்கள்.
இன்னும் 2 வார காலம் சட்டசபை கூட்டம் நடைபெற இருக்கிறது. முக்கியமாக, நாளை (செவ்வாய்க்கிழமை) காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. விவாதத்தில் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கிறார். ஜூலை 9-ந் தேதியுடன் சட்டசபை கூட்டம் நிறைவடைகிறது.

Leave a comment