விழுப்புரத்தில் தி.மு.க. நகர செயலாளர் வெட்டிக்கொலை

327 0

201609141016406753_villupuram-dmk-city-secretary-murder-police-investigation_secvpfவிழுப்புரத்தில் இன்று காலை தி.மு.க. நகர செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் நகர தி.மு.க. நகர செயலாளர் செல்வராஜ் (43). இவர் விழுப்புரம் மாவட்ட தளபதி மன்ற செயலாளராகவும் இருந்து வந்தார். ரியல்எஸ்டேட் தொழிலும் செய்தார்.விழுப்புரம் கே.கே.ரோட்டில் கணபதி குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தினமும் விழுப்புரம் வடக்கு ரெயில்வே குடியிருப்பு பகுதியில் ‘வாக்கிங்’ செல்வது வழக்கம்.

இன்று காலை விழுப்புரம் காந்தி சிலை அருகே உள்ள தி.மு.க. கட்சி அலுவலகம் அருகே தனது காரை நிறுத்தினார். பின்னர் அங்கிருந்து விழுப்புரம் வடக்கு ரெயில்வே குடியிருப்பு பகுதியில் ‘வாக்கிங்’ சென்றார்.அவருடன் கீழ்பெரும்பாக்கம் கட்டபொம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில், ஜெயப்பிரகாஷ் உள்பட 5 தி.மு.க. தொண்டர்களும் சென்றனர்.

ரெயில்வே மருத்துவமனை அருகே செல்வராஜ் சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் 5 வாலிபர்கள் பின்தொடர்ந்து வந்தனர். திடீரென்று அவர்கள் செல்வராஜை வழிமறித்து மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். செல்வராஜூக்கு அவர்கள் வணக்கம் தெரிவித்தனர்.

வாலிபர்களில் ஒருவன் முதுகின் பின்னால் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளை வெளியே எடுத்தான். மற்றவர்கள் செல்வராஜூடன் வந்தவர்களை விரட்டினர்.விபரீதம் நிகழ போகிறது என்பதை உணர்ந்த செல்வராஜ் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் அந்த வாலிபர்கள் வீச்சரிவாளால் செல்வராஜின் வலது கையை வெட்டினர்.

அந்த கும்பல் அவரை சுற்றி வளைத்து கழுத்தில் வெட்டியது. செல்வராஜ் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். ஜெயப்பிரகாஷ் ஓடி வந்து மர்ம வாலிபர்களை தடுக்க முயன்றார். அவரையும் அந்த கும்பல் வெட்டியது. இதனால் ஜெயப்பிரகாசுக்கும் கையில் காயம் ஏற்பட்டது.காயம் அடைந்த செல்வராஜ் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். செல்வராஜ் இறந்ததை உறுதி செய்ததும் அந்த கும்பல் தப்பிச் சென்று விட்டது.

செல்வராஜை கொலை செய்த மர்மகும்பல் யார்? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று தெரியவில்லை. முன்விரோதம் காரணமா அல்லது தொழில் போட்டி காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.செல்வராஜை கொன்றது கூலிப்படையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.நகர செயலாளர் செல்வராஜ் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து விழுப்புரத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், வடக்கு ரெயில்வே குடியிருப்பு ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.கொலை செய்யப்பட்ட செல்வராஜூக்கு ஜெய பாரதி (38) என்ற மனைவியும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.கொலையுண்ட செல்வராஜ் தி.மு.க. ஆட்சியின் போது உயர் கல்வி அமைச்சர் பொன்முடியின் தனி உதவியாளராக பணியாற்றியவர்.