ஜேசிபி எனப்படும் கனரக பொக்லைன் இயந்திரத்தில் புதுமணத் தம்பதி!

353 0

குதிரை வண்டியில் மணப்பெண் ஊர்வலம் போவதை பார்த்திருப்போம் மாட்டுவண்டிப் பயணம்கூட நடந்திருக்கிறது. பின்னாளில் வசதி படைத்தவர்கள் ஆடம்பரக் கார்களிலும் அதற்கும் ஒருபடி மேல் சென்று ஹெலிகாப்டரிலும் மணமக்களை ஊர்வலம் அனுப்பிய கதைகள் எல்லாம் நமக்குத் தெரியும்.

ஆனால், கர்நாடகாவில் நடந்திருப்பது புதிது. ஜேசிபி எனப்படும் கனரக பொக்லைன் இயந்திரத்தில் புதுமணத் தம்பதி பயணித்துள்ளனர். இதை, நீங்கள் நிச்சயம் இதுவரை பார்த்திருக்க மாட்டீர்கள்.

மணமகன் ஜேசிபி வாகன ஓட்டுநர். அதன் காரணமாகவே தனது திருமண ஊர்வலமும் அந்த வாகனத்திலேயே நடக்க வேண்டும் என விரும்பியிருக்கிறார். அவர் விருப்பப்படி ஜேசிபி வாகனத்தில் மணமக்கள் ஊர்வலம் செல்ல அந்த வீடியோவும் ஃபோட்டோவும்தான் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

கர்நாடகா மாநிலம் தெற்கு கன்னடா மாவட்டத்திலுள்ள புத்தூரில்தான் இந்த வித்தியாச திருமண ஊர்வலம் நடந்திருக்கிறது. சேத்தன், மம்தா இவர்கள்தான் அந்த அலங்கரிக்கப்பட்ட ஜேசிபி வாகனத்தில் உலாவந்த புதுமணத் தம்பதியினர்.

இது குறித்து மணமகன் சேத்தன் கர்நாடக செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், என் வேலையை நான் மிகவும் காதலிக்கிறேன். எனது வேலைக்கு நான் நன்றிக்கடன் செலுத்த விரும்புகிறேன். அதன் காரணமாகவே என் வாழ்வின் மிக முக்கிய நிகழ்வான திருமணத்தில் எனது தொழில் சார்ந்த இந்த வாகனத்தையே ஊர்வலத்துக்காக தேர்வு செய்தேன். எங்கள் புது வீட்டுக்கு இந்த வாகனத்தில் செல்கிறோம். அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

சமூக வலைதளங்களில் இந்த புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Leave a comment