ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை ஒப்பந்தத்தின்படி சீனா மெர்ச்சண்ட் போர்ட் கம்பனியினால் இறுதி தவணை கட்டணமாக பெற்றுக் கொள்ளப்பட்ட 584 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை திறைசேரியில் வைப்புச் செய்ய முடிந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (21) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
குத்தகை ஒப்பந்தத்தின்படி சீனா மெர்ச்சண்ட் போர்ட் கம்பனியினால் நேரடியாக இதுவரை 974 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
இதுதவிர மேலும் 146 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, நேற்றைய தினத்தில் இருந்து ஒரு மாத காலத்துக்குள் நேரடி முதலீடாக இலங்கைக்கு கிடைக்க உள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
584 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி திறைசேரியில் வைப்புச் செய்யயப்பட்டதன் மூலம் தமது வௌிநாட்டு கையிருப்பு பாரியளவு வலுவடைந்துள்ளதாகவும், அதனூடாக டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பிழப்பு வீழ்ச்சியடையும் என்றும் அவர் கூறினார்.
அதேநேரம் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி திஸ்ஸ விக்ரமசிங்க, தற்போது அந்த துறைமுகத்தில் சுமார் 600 இலங்கையர்கள் பணியாற்றுவதாகவும், தற்போது இருக்கின்ற வர்த்தக திட்டத்தின் படி மேலும் ஆயிரக்கணக்கானவர்களை சேவைக்கு இணைத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

