விடுதலைப் புலிகள் காலத்து இரகசிய நடவடிக்கைகளை இராணுவ புலனாய்வுப் பிரிவு வெளியிடத் தயார்!

311 0

விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் நடைபெற்ற காலத்திலும் அதற்கு பின்னரும் இரகசிய நடவடிக்கைகளுக்காக இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தங்கியிருந்த பாதுகாப்பு குடியிருப்புகள், அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் உட்பட சகல தகவல்களையும் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு சபைக் கூட்டத்தின் போது காவற்துறையினர் முன்வைத்த விடயங்களுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புலனாய்வு பிரிவினரின் தகவல்களை வெளியிடும் தீர்மானம் என்பது உலகில் எந்த நாடுகளும் இதுவரை எடுக்காத தீர்மானம் எனவும் தேசிய பாதுகாப்பு கருதி அந்த தகவல்களை வெளியிடக் கூடாது எனவும் சில இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவு தொடர்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு அமைய புலனாய்வு பிரிவு தொடர்பான தகவல்களை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. போரின் போதும், போருக்கு பின்னரும் விடுதலைப் புலிகள் மீள எழுச்சி பெறுவதை தடுக்கவும் பாதாள உலகக்குழுக்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைகளை தடுக்கவும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு குடியிருப்புகளில் இருந்தவாறு புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

எவ்வாறாயினும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் இரகசிய தகவல்கள் வெளியாகினால், அது முழு இராணுவ புலனாய்வுப் பிரிவின் கட்டமைப்பும் பலவீனமாவதை தவிர்க்க முடியாது என இராணுவ பிரதானிகள் கூறியுள்ளனர். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இராணுவ புலனாய்வாளர்கள் தங்கியிருந்த மல்வானை பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு வீடு தொடர்பாக தகவல்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a comment