சிறையில் 18 மதகுருக்கள்-கீர்த்தி தென்னகோன்

214 0

தண்டனை பெற்று சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மதகுருமார் 18 பேரும் சிறைச்சாலை சட்ட விதிகளின் கீழ் சமமாக நடத்தப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மதகுருமார் அல்லது வேறு குழுக்களுக்காக ஏதேனும் சலுகைகள் பெற்றுக்கொடுக்க வேண்டுமாயின் அதற்காக புதிய சட்டம் உருவாக்குவதற்கு பாராளுமன்றத்திற்கே அதிகாரம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்து, இஸ்லாம், பௌத்த கிறிஸ்தவ மதகுருமார் என 18 பேர் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சிறைச்சாலை சட்ட விதிகளின் கீழ் சமமாக நடத்தப்படவேண்டும் என்றே இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கொலை, வண்புணர்வு கொள்ளை, கலவரம் மற்றும் அரச விரோத செயல்கள் போன்றவற்றில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 18 மதகுருமார் சிறைதண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.

பௌத்த மதகுருமார் 15 பேரும் இஸ்லாம் மதகுரு ஒருவரும் கிறிஸ்தவ மதகுரு ஒருவரும் இந்து மதகுரு ஒருவரும் இவ்வாறு தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த சமயம் அவரை கொலை செய்ய முயற்சித்த விடயம் தொடர்பில் இந்து மதகுரு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம் நடத்திய ஆய்வுகளின் பிரகாரம் தற்போது சிறையிலிருக்கும் 18 மதகுருமாரும் சிறைச்சாலை சட்ட விதிகளின் கீழேயே தமது தண்டனைக் காலத்தை அனுபவித்து வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

அவர்களுடைய உணவு, உடை, வெளியாரை சந்தித்தல் உட்பட அனைத்து நடவடிக்கையும் அந்த சட்டவிதிகளின் கீழேயே நடைபெறுகிறது. உதாரணமாக அவர்கள் அனைவரும் சிறைக் கைதிகளுக்கான இலக்கம் ஒன்றின் கீழேயே அறியப்படுகின்றார்கள். சிறைக் கைதிகள் தொடர்பில் தற்போது நடைமுறையிலிருப்பது சிறைச்சாலை சட்டமே.

இதில் மதகுருமார் அல்லது வேறு குழுக்களுக்காக விசேட சலுகைகள் பெற்றுக்கொடுக்க வேண்டுமாயின் அதற்காக புதிய சட்டம் உருவாக்குவதற்கு பாராளுமன்றத்திற்கே அதிகாரம் உள்ளது என்றும் இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அவ்வியக்கத்தினரால் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் மனித உரிமைகள் நிலையத்தின் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

Leave a comment