பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிரான வழக்கின் சாட்சியாளரை கைது செய்ய உத்தரவு

222 0

முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் அவரின் தனிப்பட்ட செயலாளர் பாலமானகே தயாவங்ச ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.

அதேநேரம் அந்த வழக்கின் முதலாவது சாட்சியாளரை கைது செய்வதற்கும் கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் முதலாவது சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ள விமான சேவைகள் அதிகாரசபையின் ஓய்வுபெற்ற பொறியியலாளரான அபேரத்னகே விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் அவர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகாமையின் காரணமாக அவரை கைது செய்யுமாறு உத்தரவிட்ட பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க, வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11 வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பிரியங்கர ஜயரத்ன விமான சேவைகள் அமைச்சராக பதவி வகித்த போது, சட்ட ரீதியற்ற முறையில் விமான சேவைகள் அபிவிருத்தி திட்டங்களுக்கான அபிவிருத்தி அதிகாரி என்ற புதிய பதவிக்கு அமைச்சரின் தனிப்பட்ட செயலாளரை நியமிப்பதற்கு விமான சேவைகள் பணிப்பாளர் சபையை ஊக்குவித்த குற்றச்சாட்டில் அமைச்சருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Leave a comment