ஐ.தே.க.வுடன் ஒன்றிணைந்து செயல்படுவது பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் – சுசில்

321 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து செயல்படுவது அவரது அரசியல் இருப்புக்கு பாரிய ஆபத்தினை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

தற்போதைய அரசியல் சூழலில் அனைவரும் எதிர்பார்க்கும் விடயமாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் காணப்படுகின்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர்  சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. மறுபுறம் பொது எதிரணியின் பொது வேட்பாளர் தொடர்பிலும் உறுதியான தகவல்கள் இல்லை.

இந் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பிரதமரை களமிறக்க அக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். அதற்கிணங்க பிரதமர்  ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது வரவேற்கத்தக்க விடயமாகும். ஏனென்றால் இவரை எதிர்த்து போட்டியிடும் எதிர்வேட்பாளர் நிச்சயம் பெரும்பான்மையான ஆதரவுடன் வெற்றிப் பெறுவார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து செயல்படுவது அவரது அரசியல் இருப்புக்கு பாரிய ஆபத்தினை ஏற்படுத்தும். எனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மக்கள் ஆதரவும்,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவையும் ஒன்றிணைத்தால் சுதந்திர கட்சி பலம்பெறும்.

ஆகவே இதனை நோக்கமாக கொண்டே பொது எதிரணியின் கொள்கைகளை ஒன்றிணைத்து  இரண்டு தரப்பினைரையும் இணைக்கும் பாலமாக நாம் செயற்பட்டு வருகின்றோம் என்றார்.

Leave a comment