யுத்தம் முடிந்தபோதிலும் சமாதானம் மலரவில்லை- ராஜித

266 0

நாட்டில் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டபோதும் நிரந்தர சமாதானம் இன்னும் மலரவில்லை என சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆறு மாடிக்கான அவசர விபத்துச் சேவைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டு விழாவும், இரத்த வங்கி கட்டிட திறப்பு விழாவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஏ.எல்.எப்.ரகுமான் தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், “தற்காலத்தில் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டபோதும் நிரந்தர சமாதானமொன்று இன்னும் இந்த நாட்டிலே மலரவில்லை. அந்த நிரந்தர சமாதானத்தினை கொண்டுவர அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும்.

எதிர்க்கட்சியினர் இன்று நல்லாட்சி அரசாங்கம் என்னசெய்கின்றது என எங்களை நோக்கி கேட்கின்றார்கள். நாங்கள் இந்த நாட்டிலே ஆரோக்கியமான மனிதர்களை உருவாக்கியிருக்கின்றோம்.

இந்த நாட்டின் சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் தெற்குக்கு செய்யும் அதே சேவையைத்தான் வடகிழக்கு மாகாணங்களுக்கும் செய்கின்றோம்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பதினைந்து இலட்சம் மாத்திரமே செலவழிக்கப்பட்டது. ஆனால் நாங்கள் தற்போது இருநூறு இலட்சமாக அதிகரித்திருக்கின்றோம். நோயாளர் ஒருவர் புற்று நோயால் இறக்கின்றார் என்றால் அது வைத்தியசாலையில் உள்ள குறைபாடாகும். இதனை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் சிறந்த வைத்திய சேவையை வழங்கி வருகின்றோம்.

நல்லாட்சியில் மூன்று வருடங்களாக நோயாளிகளுக்கு சிறந்த சேவையை செய்து வருகின்றோம். அமெரிக்காவில் இருந்து எமது மக்களுக்கான சுகாதார உதவிகளை செய்வதற்காக பல்வேறுபட்ட சுகாதார உதவிகளை பெற்று வருகின்றோம். இந்த உதவிகள் மூலம் எமது நாட்டில் உள்ள வைத்தியசாலைகள் சிறந்த சேவைகளை தற்போது செய்து கொண்டு வருகின்றது” என தெரிவித்துள்ளார்.

Leave a comment