வடக்கில் இராணுவக் கட்டப்பாட்டில் உள்ள வீடுகள் இடித்தழிப்பு

563 0

வலி வடக்கில் கட்டுவன் மயிலிட்டி வீதியின் கிழக்குப் பகுதியில் இராணுவத்தின் ஆக்கிரப்பில் உள்ள மக்களுக்கு சொந்தமான காணிகளில் எஞ்சியிருக்கும் வீடுகள், மதில்கள், என்பவற்றை புல்டோசர் பயன்படுத்தி இடித்தழிக்கும் நடவடிக்கைகள் கடந்த ஒருவாரகாலமாக இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பற்றைகள் வெட்டி அகற்றப்பட்டு வீடுகள் இடித்தழிக்கப்பட்டு வெட்டவெளியான நிலத்தில், தென்னம்பிள்ளை நடும் நடவடிக்கைகளையும், இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். இராணுவத்தின் இந்த நடவடிக்கை தமது காணிகள் இனி ஒருபோதும் விடுவிக்கப்படமாட்டாது என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

வலி வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த 28 ஆவது ஆண்டு நிறைவுநாள் நாளை வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில் இராணுவத்தினர் இந்த நடவடிக்கைகள் மக்களை அச்சத்திற்கும் கவலைக்கும் உள்ளாக்கி உள்ளன. மகிந்த ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதியாக இருந்த ஹத்துருவிங்கவின் காலத்தில், , வலிவடக்கு பாதுகாப்பு வலையத்தில் இருந்த வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு இருந்தன.

2014ஆம் ஆண்டளவில் அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டு இருந்தது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் மக்கள் காணிகள் வலி வடக்கில் படிப்படியாக கையளிக்கப்பட்டது. அண்மையில் 683 ஏக்கர் நிலப்பரப்பு வலி.வடக்கில் விடுவிக்கப்பட்டு இருந்தது. அவ்வாறு விடுவிக்கப்பட்ட பிரதேசத்தின் எல்லையில் இராணுவத்தினர் புதிய பாதுகாப்பு வேலி அமைத்துள்ளனர்.

புதிதாக அமைக்கப்பட்ட வேலியினால், எல்லைப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் உள்ள வீடுகளே இராணுவத்தினரால் தரைமட்டமாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment