ஜோசப் பரராஜசிங்கம படுகொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

356 0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத் தின் படுகொலை வழக்கின் மீதான விசாரணைகள் எதிர்வரும் ஜுலை மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான விசாரணையின் மற்றுமொரு பகுதி மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். இஸர்டீன் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜாவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

அரச சிரேஷ்ட சட்டத்தரணி மாதவ தென்னகோன் பிரதிவாதியிடம் குறுக்குக் கேள்விகளூடாக விசாரணைகளை நடத்தினார். புலனாய்வுத்துறையினரின் அச்சுறுத்தலுக்கு அமைய தாம் வாக்குமூலம் வழங்கியதாக பிரதிவாதிகளால் ஏற்கனவே மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

எனினும், பல தடவைகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது ஏன் இந்த விடயத்தை குறிப்பிடவில்லை என அரச தரப்பு சட்டத்தரணி பிரதிவாதியிடம் கேள்வி எழுபியிருந்தார். அதற்கு சந்தேகநபர், இது தொடர்பில் கடிதம் மூலம் ஏற்கனவே நீதிபதிக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

எனினும், இந்த வழக்கிலிருந்து தப்பிக்கொள்வதற்கு பிரதிவாதிகளால் வடிவமைக்கப்பட்ட நாடகமே குறித்த கடிதம் என அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது 2014 இல் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், 2015 ஆம் ஆண்டு குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர் ஏன் காலம் தாழ்த்தி கடிதத்தை எழுதினர் எனவும் குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பொய் எனவும் சட்டத்தரணி கூறியுள்ளார்.

பிரதிவாதிகளால் நீதிபதிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் நேற்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது கடிதம் பொய் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சிறைச்சாலையிலுள்ள அனைத்து ஆவணங்களும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, 2014, 2015, 2016, 2017, 2018 ஆம் ஆண்டுகளுக்கான சிறைச்சாலைகள் பதிவுப் புத்தகங்களும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. இதன்போது பிரதிவாதிகளால் அனுப்பப்பட்ட கடிதத்தில் ஒன்றுக்கு பின் முரணான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சாட்சி விசாரணைக்கு மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர், மாவட்ட நீதிமன்ற பதிவாளர், மற்றுமொரு சாட்சியாளரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும், குறித்த மூவரிடமும் சாட்சி பதிவுகளை மேற்கொள்வதற்கு நேரம் போதாமையால் எதிர்வரும் ஜூலை மாதம் 18 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மரியால் பேராலயத்தில் 2005ஆம் ஆண்டு டிசம்பவர் 25ஆம் திகதி நத்தார் ஆராதனையின்போது இனந்தெரியாத ஆயுததாரிகளினால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Leave a comment