சிங்களக் குடியேற்றங்கள், காணி ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது-சீ.வீ.கே.சிவஞானம்

283 0

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் காணி ஆக்கிரமிப்புக்கள் என்பன தொடர்பில் உருவாக்கப்பட்ட செயலணியினால் இந்த விடயங்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபை அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற போது கருத்து வெளியிடுகையிலேயே சிவஞானம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் மாகாண சபையில் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து மாகாண அவைத் தலைவர் தலைமையிலான மாகாண சபையினர் அண்மையில் முல்லைத்தீவிற்கு விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டதுடன் போராட்டமொன்றையும் மேற்கொண்டிருந்தனர்.

இதன் பின்னர் மாகாண சபையினரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்துக் கலந்துரையாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய வடக்கில் இடம்பெறுகின்ற சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் மாகாண சபையினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று அண்மையில் நடைபெற்றிருந்தது.

இதன் போது விசேட செயலணி யொன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கமைய அச் செயலணி தனது நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றது. இந்நிலையிலேயே முல்லைத்தீவு உட்பட வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற குடியேற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

அத்தோடு மேலும் முன்னெடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இதற்கு தொடர்ந்தும் சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் சிவஞானம் கேட்டுக் கொண்டார்.

Leave a comment