அரசு ஊழியர்-ஆசிரியர்கள் போராட்டத்தை தூண்டுபவர்களுக்கு துணை போகக்கூடாது: ஓ.பன்னீர்செல்வம்

199 0

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த நினைப்பவர்களுடன் துணை போகக் கூடாது என்று சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.

சட்டப்பேரவையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டம் குறித்து பேசியதாவது:-

2017-18ஆம் ஆண்டில், மாநில அரசு பெற்ற மொத்த வரி வருவாய் 93,795 கோடி ரூபாயாகும். இதில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சம்பள செலவு மட்டும் 45,006 கோடி ரூபாயாகும். இது தவிர, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு அரசு வழங்கும் ஓய்வூதியத் தொகை 20,397 கோடி ரூபாய் என மொத்தம் 65,403 கோடி ரூபாய் நிர்வாகத்தை நடத்தும் அரசு ஊழியர்களுக்காக சம்பளமாகவும், ஓய்வூதியமாகவும் வழங்கப்படுகிறது. அதாவது, மொத்த வரி வருவாயில் சுமார் 70 சதவீதம் இவ்வாறு செலவு செய்யப்படுகிறது.

பொது மக்களுக்கான நலத்திட்டங்களை, தொலை நோக்குத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தான் அரசு இருக்கிறது. அதை நிறைவேற்றத்தான் அரசு ஊழியர்கள் இருக்கின்றனர். அவ்வாறு இருக்கும்போது, அரசின் வருவாயில், நிர்வாகச் செலவு என்பது மிக அதிகமாக இருந்தால், திட்டங்களுக்கு நிதி ஒதுக்க இயலாது. இதை பொறுப்புணர்வுள்ள அரசு ஊழியர்களாகிய அனைவரும் நன்கு அறிவார்கள்.

அரசு ஊழியர்கள் இந்த உணர்வுடன் செயல்பட்டால் தான் ஒரு நல்லாட்சியை வழங்கி பொது மக்களுக்கு நாம் அனைவரும் ஒன்று கூடி நன்மை செய்யமுடியும். ஊதிய உயர்வு வழங்கப்பட்ட பின்பு அதில் முரண்பாடுகள் ஏதேனும் இருப்பினும் அதையும் சரிசெய்ய அம்மாவின் அரசு ஒரு குழுவையும் அமைத்துள்ளது.

இக்குழு பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களிடமிருந்து குறைகளைக் கேட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவும் விரைவில் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. இதை அனைத்து அரசு ஊழியர்களும், ஊழியர் சங்கங்களும் நன்கு அறிவர்.

தமிழ்நாட்டில் உள்ள மொத்த அரசு ஊழியர்கள்-12 லட்சம் பேர். ஓய்வூதியம் பெறுவோர் 7.42 லட்சம் பேர். மொத்தமாக இந்த 19.42 லட்சம் குடும்பங்களுக்கு அரசின் வரி வருவாயில் செலவிடப்படும் தொகை 70 சதவீதம் ஆகும். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உட்பட மொத்தமாக உள்ள 2 கோடி குடும்பங்களுக்கும் சேர்த்து, மாநில அரசின் வரி வருவாயில் மக்கள் நல திட்டத்திற்கும், வளர்ச்சித் திட்டத்திற்கும் செலவிடப்படும் தொகை 6 சதவீதம் மட்டுமே என்பதை அரசு ஊழியர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள் என்றே கருதுகிறேன்.

இந்த அளவு சம்பள உயர்வையும், பிற சலுகைகளையும் வழங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு, மக்களின் நலன் கருதி அரசு ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு, பொறுப்புணர்வோடு கடமை ஆற்றுவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.

சிறப்பான அரசு நிர்வாகத்தை வழங்க வேண்டியது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட நமது அனைவரின் கடமை என்பதை உணர்ந்து, மாநில அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, கோரிக்கைளை முன்நிறுத்தி அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த நினைப்பவர்களுடன் துணை போகக் கூடாது என்று நான் வேண்டுகோளும் விடுக்கிறேன்.

தற்போதுள்ள சூழ்நிலையில் எந்தெந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும், எவை நிறைவேற்ற முடியாது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். நிதி நிலைக்கு உட்பட்டு, நிறைவேற்றப்படக்கூடிய கோரிக்கைகளை இந்த அரசு என்றும் தயக்கம் காட்டாமல் செயல்படுத்தும் என்பதையும் கடந்த ஓராண்டு காலமாக இந்த அரசு எடுத்த நல்ல பல நடவடிக்கைகள் மூலம் நீங்கள் அறிவீர்கள்.

ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி, 1.1.2006 அன்று பெற்ற மாதாந்திர சராசரி ஊதியம் மற்றும் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை ஏற்றபின் 1.1.2016 அன்றைய மாதாந்திர சராசரி ஊதியம் மற்றும் ஆறாவது ஊதியக் குழு அமல்படுத்திய பின்னும், ஏழாவது ஊதியக் குழு அமல்படுத்திய பின்னும் ஏற்பட்டுள்ள சராசரி சம்பள உயர்வு எவ்வளவு என்பதை நான் குறிப்பாக சில பல உதாரணங்களை நான் சபைக்கு எடுத்துச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த நிலையிலும், 1.1.2016 முதல் புதிய ஊதியத்தை அமல்படுத்தி நிலுவைத் தொகை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சார்ந்த 1,176 பேர், 21.2.2018 அன்று, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் ஊர்வலமாக சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் தலைமைச் செயலகத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்ட போது, அவர்கள் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், அவ்வமைப்பினர் 24.2.2018 வரை அவர்களது மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர்.

பின்னர், இவ்வமைப்பினர் மீண்டும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 8.5.2018 அன்று அரசு விருந்தினர் மாளிகை அருகே ஒன்று கூடி தலைமைச் செயலகத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த முற்பட்டபோது, காவல் துறையினர் அவர்களை தடுத்து, கைது செய்தனர். மேலும், இப்போராட்டத்தில் பங்கு பெறுவதற்காக மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து சென்னைக்கு வந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 7,546 பேர் ஆங்காங்கே கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இருப்பினும் இவ்வமைப்பினர், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள் 150 பேர், நேற்று (11.6.2018) எழிலகம் வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

தற்போது, ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன் தலைமையில் 108 பேர், எழிலகம் வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நான் இங்கே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் கருதி, தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறியுள்ளேன். எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்த்து, தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக ஆக்கபூர்வமாக செயல்பட்டு, மக்கள் நலனுக்காக சிறப்பான நிர்வாகத்தை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நான் அன்போடு அவர்களை கேட்டுக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Leave a comment