பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்கா, வடகொரியா இடையே ஒப்பந்தம்

10741 0

சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பின் நிறைவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் இருவரும் அமைதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

அமெரிக்கா, வடகொரியா இடையிலான பகைமை உணர்வு மறைந்து நட்புறவுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார். அதன்பின்னர் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தன. இதற்காக சிங்கப்பூரில் ஜூன் 12-ம் தேதி அமெரிக்க அதிபர், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறும் என நாள் குறிக்கப்பட்டது.

எனினும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த சந்திப்பு நடைபெறுமா? என்பதில் சந்தேகம் நீடித்தது. பின்னர் நீண்ட இழுபறிக்குப் பிறகு சந்திப்பு உறுதி செய்யப்பட்டது. அதன்படி சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் இன்று டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்திப்பு நடந்தது. உலகமே உற்றுநோக்கிய இந்த சந்திப்பின்போது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

இந்த சந்திப்பு எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்ததாகவும், மிகப்பெரிய பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். இதேபோல் கிம் ஜாங் அன்னும் சாதகமான கருத்தையே கூறினார்.

அதன்பின்னர், இரு நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், டிரம்ப், கிம் ஜாங் அன் இருவரும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனால், அமைதி மற்றும் நட்புறவு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒப்பந்தமாக இருக்கலாம் என தெரிகிறது.

Leave a comment