சிறையிலிருந்த பிரபல எழுத்தாளர் சௌபா காலமானார்!

948 0

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சௌபா,  உடல்நலக்குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மதுரை டோக் நகரைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சௌபா என்ற சௌந்தரபாண்டியன்,  ‘சீவலப்பேரி பாண்டி’ என்ற கதையை எழுதியதன்மூலம் மிகவும் பிரபலமானார். அதுவே பின்னாளில், ‘சீவலப்பேரி பாண்டி’ என்ற தலைப்பிலேயே படமாக எடுக்கப்பட்டது.  அவர், தன் மனைவியைப் பிரிந்து மகனுடன் மதுரையில் வசித்துவந்தார். இந்நிலையில், தன் மகன் குடித்துவிட்டு தினமும் தகராறு செய்ததால், கோபத்தில் அவரை கம்பியால் தாக்கி கொலைசெய்துவிட்டார். இதை அவரே ஒப்புக்கொண்டார்.

தன் மகனைக் கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சௌபாவுக்கு சில நாள்களில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஏற்கெனவே அவருக்குச் சர்க்கரை நோய் இருந்ததால் போலீஸ் விசாரணை, நீதிமன்ற அலைச்சலினால் மருந்துகளைத் தொடர்ச்சியாக உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகி அவரின் உடல் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில், கைதிகளுக்கான சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

Leave a comment