மோடியின் ஆட்சியில் தமிழகத்தில் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் – ப.சிதம்பரம்

895 0

மோடியின் 4 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தில் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

மோடி ஆட்சியில் இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் அச்சத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். தூத்துக்குடியில் 13 பேரை சுட்டது என்பது அனைத்து விதிகளையும் மீறி நடந்துள்ளது. இதை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டிக்கின்றது.

துப்பாக்கிச்சூடு நடத்தியதற்காக ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் இந்த அரசு பதவி விலக வேண்டும். இங்கு இந்தி திணிப்பதற்கும் இடமில்லை. இந்துத்துவாவிற்கும் இடம் இல்லை. இதை எதிர்த்து போராடுவோம். 15 லட்சம் வங்கியில் போடுவேன் என்று சொன்னவர்கள் 15 காசு கூட போடவில்லை.

தூத்துக்குடியில் 20 ஆண்டுகாலமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். காவல்துறை அனைத்து விதிமுறைகளையும் மீறி கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

மத்திய அரசை பார்த்து அஞ்சுகிறார் தமிழக முதல்- அமைச்சர். துப்பாக்கியால் சுட்டது சரியா? தவறா? என கூட சொல்லத் தெரியாத முதல்-அமைச்சர் நாட்டில் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? முதல்-அமைச்சர் அச்சத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். யாரைப்பார்த்து அஞ்சுகிறார் முதல்வர்?

தமிழகத்தில் பா.ஜ.க. எந்த காலத்திலும் காலூன்ற முடியாது. சேகர் ரெட்டி, அமைச்சர் வீட்டில் பிடிபட்ட பணம் எது? கள்ள நோட்டு அடிக்க முடியாது என்று சொன்னார்கள். கோவையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அடித்து விட்டார்கள். காங்கிரஸ் பதவி விலகும் போது இக்கட்டான சூழ்நிலையிலும், இந்திய பொருளாதாரம் 6.4 என்ற அளவில் தான் இருந்தது.

4 ஆண்டுகால மோடி ஆட்சியில் 50 ஆயிரம் சிறு, குறு தொழில் முடக்கப்பட்டு விட்டன. தமிழ்நாட்டில் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். நாட்டில் பல லட்சம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை ஏற்றுமதியில் கடந்த ஆண்டை விட 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2017-18ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.7 ஆக குறைந்துள்ளது. வியாபாரிகளை வாட்டி வதைக்கும் ஜி.எஸ்.டி. வரியை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் திருத்தியமைக்கும். பா.ஜ.க.வின் ஆட்சியில் ஏற்றுமதியின் வளர்ச்சி பூஜ்யமாக உள்ளது.

கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்திற்கான காரணம் இரண்டுக்கும் 10 சதவீதம் வரியை உயர்த்தியது தான். பொருளாதாரத்தை குலைத்து, வரியை உயர்த்தி மக்களை கசக்கி பிழிந்துள்ளது மோடியின் ஆட்சி.

10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் 3 மடங்கு உயர்ந்தது. இந்தியாவில் சிறுபான்மையினர் அச்சத்துடன் வாழ்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment