தூத்துக்குடி கலவர வழக்கு: நாம் தமிழர் கட்சி நிர்வாகி உள்பட 7 பேர் கைது

392 0

தூத்துக்குடியில் நடந்த கலவர வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மாதம் 22-ந்தேதி போராட்டக்காரர்கள் நடத்திய பேரணியில் மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவங்களில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டதால் அவர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர்.

இதில் 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு மற்றும் கலவர சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டன. ஒவ்வொரு வழக்கிற்கும் தனித்தனியாக அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியில் போராட்டத்தை தூண்டும் வகையில் செயல் படுபவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் நேற்று இரவு முதல் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஏராளமானோர் போலீஸ் பிடியில் சிக்கினர். சிலர் விசாரணைக்கு பின் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

அவர்களில் நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி மண்டல ஒருங்கிணைப்பாளர் இசக்கிதுரை, குமரெட்டியாபுரம் கிராமத்தில் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி வந்த மகேஷ் மற்றும் பண்டாரம்பட்டி பால்ராஜ், பாண்டி உள்பட 7 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment