வடக்கு, கிழக்கில் வங்கி கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் நோக்கம் என்ன?

2574 0

தொழிற்சாலை இல்லாத, பொருளாதாரம் சீரற்ற நிலையிலுள்ள வடக்கு, கிழக்கில் வங்கி கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் நோக்கம் என்ன? குத்தகை கம்பனிகளும் அதிகமாக உள்ளன. வடக்கு கிழக்கில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை விடவும் தற்போது வங்கி கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

பொது மக்களின் பணத்தை உறிஞ்சுவதற்கே இவ்வளவு கிளைகள் வடக்கு, கிழக்கில் திறக்கப்பட்டுள்ளது.இது அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார்.

தமிழர்களின் பணமும் சொத்துகளும் அரசாங்கத்தின் வைப்புகளில் உள்ளது. ஆனால் வடக்கு கிழக்கு தமிழர்கள் நுண் நிதி நிறுவனங்களின் கடன் செலுத்த முடியாமல் அதன் தாக்கத்தினால் பாதிக்கப்படுகின்றனர். வடக்கில் தற்கொலைகள் அதிகரிப்பின் பின்னால் நிதி நிறுவனங்களில் தாக்கம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மக்கள் விடுதலை முன்னணி தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க கொண்டு வந்த நுண் நிதி நிறுவனங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,

நுண் நிதி நிறுவனங்களின் மிலேச்சனதனமான செயற்பாடுகள் மோசமாக உள்ளது. வடக்கு கிழக்கில் மாத்திரமின்றி தற்போது தெற்கிலும் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது. போரால் பாதிக்கப்பட்ட மக்கள் திண்டாடும் நிலையில் வீட்டு தேவைக்காகவும் வாழ்வாதாரங்களுக்காக மக்கள் கடன் பெறுகின்றனர். இதனை பயன்படுத்தி பகல் கொள்ளையில் நிதி நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.

யாழ்ப்பாணத்தில் 6 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். எனினும் அங்கு சுமார் 136 வங்கி கிளைகள் உள்ளன. வடக்கு கிழக்கு மாகாண எல்லையில் உள்ள மாவட்டமொன்றில் 1 இலட்சம் மக்களுக்கு 23 கிளைகள் உள்ளன. பொதுவாக வங்கி அடர்த்தியின் படி 17 வங்கி கிளைகளே இருக்க வேண்டும். அதுதான் இலங்கையின் நிதி ஏற்பாடாகும்.

ஆனால் தொழிற்சாலை இல்லாத, பொருளாதாரம் சீரற்றுள்ள வடக்கு கிழக்கில் வங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் நோக்கம் என்ன? குத்தகை கம்பனிகளும் அதிகமாக உள்ளன. பொது மக்களின் பணத்தை உறிஞ்சுவதற்கே இவ்வளவு கிளைகள் வடக்கு, கிழக்கில் திறக்கப்பட்டுள்ளன. இது அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்படாகும்.

2009 ஆம் ஆண்டுக்கு முன்பு வடக்கில் 26 வங்கி கிளைகளும் கிழக்கில் 52 கி‍ளைகளுமே இருந்தன. ஆனால் தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளன. எந்த நோக்கத்துக்காக இது உருவாக்கபபட்டுள்ளது. வடக்கின் தற்கொலைகள் அதிகரிப்பின் பின்னால் நிதி நிறுவனங்களில் தாக்கம் உள்ளது.

கடன் தீர்வுக்கு அரசாங்கம் மன்னிப்பு வழங்க வேண்டும். இல்லாவிடின் கால அவகாசம் வழங்க வேண்டும். வடக்கு கிழக்கு மக்கள் மீது யுத்தம் தந்த தாக்கத்தை விடவும் கடன் பிரச்சினையும் நுண் நிதி நிறுவனங்களின் செயற்பாட்டினால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆகவே இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காண அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும்.

>தமிழர்களின் பணமும் சொத்துகளும் அரசாங்கத்தின் வைப்புகளில் உள்ளது. ஆனால் தமிழர்கள் நுண் நிதி நிறுவன தாக்கத்தினால் பாதிக்கப்படுகின்றனர். வடக்கு, கிழக்கில் அரசாங்கம் திட்டமிட்டு இந்த காரியங்கள் செய்கின்றதா?. ஆகவே உடன் பொது மக்களின் கிராம மக்களின் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

Leave a comment