தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும்

255 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை சுயபரிசோதனை செய்துக் கொள்ளாவிடின், கிழக்கு மாகாண சபை தமிழர்களிடமிருந்து பறிபோகும் என அந்தக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு பல பாடங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான தலைமைக் காரியாலயம் நேற்று வெல்லாவெளி பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.

ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நா.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதீதியாக கலந்துகொண்டார்.

இதனையடுத்து ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளரினால் கட்சி தலைமைக் காரியாலம் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதற் தற்கொடையாளி தியாகி பொன் சிவகுமாரின் 44வது நினைவஞ்சலி நிகழ்வும் அனுட்டிக்கப்பட்டது.

தமிழ் மக்களுக்காக தன்னுயிரை ஈர்ந்த வீர மறவர்களும் இதன்போது மலரஞ்சலி செலுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், மாகாணசபை தேர்தல் ஆறு மாதங்களுக்குள் நடைபெற போவதாக அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், இதுவரை தமது கட்சித் தலைமை எந்தவொரு நடவடிக்கையையும் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என குறிப்பிட்டு விசனம் வெளியிட்டுள்ளார்.

தமிழர் தாயகத்தின் ஒரு பகுதியான கிழக்கு மாகாணம் தமிழர்களிடமிருந்து பறிக்க பல்வேறு முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளை தடுக்க வேண்டுமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபை தாரைவார்க்கப்படுமானால் பெயர் மாற்றங்கள், திட்டமிட்ட குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்த வியாழேந்திரன், சில உள்ளுராட்சி சபைகள் பறிபோவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காலம் தாழ்த்திய முடிவே காரணம் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a comment