யாருடையக் குரலாகப் பேசுகிறார் ரஜினி?

311 0

அப்பா, ரஜினி பேசியதை கேட்டீங்களா?’ பெங்களூரிலிருந்து மகன் போனில் கேட்கிறான். தொடர்ந்து, ‘அத பார்த்து அத்தனை பேரும் திட்டித் தீர்க்கறாங்க. மோடியின் குரலா ரஜினி பேசறதா வறுத்தெடுக்கிறாங்க!’ என்றும் பின் மொழிகிறான். இது என் மகனின் கருத்து மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களை திறந்தால் அத்தனை பேருமே ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

‘சமூக விரோதிகள் போராட்டக்களத்தில் ஊடுருவி விட்டார்கள். அதனால்தான் இந்த உயிர்ப்பலிகள்!’ என்கிறார். ‘போராட்டக்களத்திற்கு மக்கள் வரும்போது ஜாக்கிரதையாக இருக்கணும்!’ என எச்சரிக்கிறார்.‘போலீஸ், உளவுத்துறை செயலிழந்து விட்டது!’ என்பவர், ‘இப்படியே தொழிற் சாலைகளுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தால் நம் நாட்டுக்கு தொழிற்சாலைகள் எதுவுமே வராது. தொழில் தொடங்க யாருமே வர மாட்டாங்க!’ என்றும் அங்கலாய்க்கிறார். ‘ஏற்கனவே நம் மண்ணில் விவசாயம் முடிஞ்சு போச்சு. இனி தொழிலும், தொழிற்சாலைகளும் இல்லைன்னா என்ன ஆகும்?’ என்றொரு அச்சத்தை மக்கள் முன் விதைக்கிறார். அது மட்டுமா? ‘திமுக, அதிமுக இதுல ரெண்டுமே அரசியல் செய்யறாங்க. அதுல அப்பாவி மக்கள்தான் பலியாகிறாங்க!’என்பவர், ‘முதல்வரை ராஜினமா செய்யச் சொல்லி இன்னமும் ஏன் ரஜினி கேட்கவில்லை!’ என்ற நிருபரின் கேள்விக்கு, ‘அது தேவையில்லை சார். எல்லாத்துக்குமே முதல்வர் ராஜினமா செய்யணும்ன்னா நிலைமை என்னாவது? அது நமக்கு தேவையில்லை!’ என்றும் முரண்படுகிறார்.

என்ன அரசியல் இது? யாருடைய குரலாய், யாருக்கான குரலாய் ஒலிக்கிறார் ரஜினி.

உளவுத்துறை செயலற்று போச்சு என்றால் எந்த மாதிரி அவை செயலற்றது. அதை சொல்ல வேண்டாமா? போலீஸின் உளவுத்துறை என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய தேசத்தில் மட்டுமல்ல, உலக நாடுகளில் கூட எத்தகைய செயல்களில் ஈடுபடும் என்பது ஆட்சியாளர்களுக்கும், போராளிகளுக்கும் தெரியும். கலகம் நடக்கப் போவதையும் சொல்லும். அதில் குளிர் காயவும் செய்யும். யார் ஆளுகிறார்களோ அவர்களின் செயலாகவே அது செயல்படும்.

ஒரு சம்பவம்:

எனக்கு தெரிந்து ஒரு சம்பவம். கேள்வி கேட்டதற்காக ஒரு அதிகாரி திருப்பூரில் ஒரு பத்திரிகை நிருபரை அடித்து, சட்டையை கிழித்து பின்னால் கையை கட்டி பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தன் ஊழியர்களை விட்டு இழுத்துச் சென்றார். போலீஸாரும் அவரின் ஏவலின் பேரில் அந்த நிருபரை நையப்புடைத்தார்கள். இந்த சம்பவத்தை கண்ணெதிரே பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் துடித்துப் போய் மற்ற பத்திரிகை நிருபர்களுக்கு போன் செய்ய, பத்திரிகை உலகம் பதட்டமடைந்தது. நடந்ததை விசாரித்து உடனடியாக பத்திரிகையாளர் மன்றங்கள் போராட்டக் களத்தில் இறங்கியது. இந்த சம்பவம் நடந்தது இரவு 9 மணி. 9.45 மணிக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான பத்திரிகையாளர்கள் குறிப்பிட்ட இடத்தில் அசெம்பிள் ஆகி சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

அது நாலு முனை சந்திப்பு உள்ள பிரதான சாலை. ஒரு மூலைக்கு நான்கைந்து பத்திரிகையாளர்கள் நின்றிருந்தாலே அதிகம். அதற்குள் சில பஸ்களிலிருந்த பயணிகள் ஓடி வந்தார்கள். மறியலில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை தாக்கினார்கள். எனவே மற்ற சாலை மூலைகளில் அமர்ந்திருந்தவர்களும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று அந்த பயணியுடன் வம்புக்கு நின்றார்கள். இந்த நேரத்தில் எதிர்திசையில் ஒரு இருசக்கர வாகனம் உடைக்கப்பட்டது. இன்னொரு கடை தாக்கப்பட்டது. அங்கே பத்திரிகையாளர்கள் தவிர அசெம்பிள் ஆனவர்கள் சில உளவுப் போலீஸார் மட்டுமே. வாகனங்கள் உடைப்பு, கடை உடைப்பு போன்ற வன்முறைகளில் நிச்சயம் பத்திரிகையாளர்கள் ஈடுபடவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். சமூக விரோதிகளும் யாரும் இல்லை. அப்படியானால் இந்த வன்முறையில் ஈடுபட்டது பொதுமக்களா? நிச்சயம் இல்லை.

பின்னாளில் ஒரு உளவுத்துறை போலீஸ்காரர் பேசுகிறார்: ‘போராட்டம்ன்னா சும்மாவா? நீங்க நாலுபேர் போராடினாலும் அதை நாங்க எஃப் ஐ ஆர் போட்டு வச்சுக்குவோம். அதற்கு வலுவான எவிடன்ஸ் வேண்டாமா? கிடைச்சா பார்ப்போம். இல்லைன்னா கிரியேட் செய்வோம். அதுதான் போலீஸ்!’ என்றார்.

இதேபோல் கோவை கலவரம், குண்டுவெடிப்பு என பெரும் பதட்டத்தில் ஆழ்ந்து ஒரு வருடம் கழித்து துணைப் பிரதமர் அத்வானி கோவைக்கு வந்தார். வ.உ.சி பூங்கா மைதானத்தில் கடும் பாதுகாப்பு வளையத்தில் நின்று பேசினார். அப்போது கோவையின் எம்பியாக இருந்த பாஜகவை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், அப்போது கோவை பொறுப்பில் இருந்த போலீஸ் அதிகாரியை கண்டபடி தாக்கிப் பேசினார். பாஜக தொண்டர்களை கூட்டத்திற்கு வரவிடாமல், அவர்களை செயல்பட விடாமல் செய்பவர் குறிப்பிட்ட அதிகாரிதான்!’என்பதை பட்டியலிட்டார்.

அதே சமயம் ஒரு குறிப்பிட்ட உளவுத்துறை அதிகாரி பத்திரிகையாளர்கள் கேலரிக்கு வந்தார். ‘ஏழு தீவிரவாதிகள் வங்கத்திலிருந்து ஊடுருவல்!’ என்ற செய்தித் தகவலை தனக்கு நெருக்கமான பத்திரிகை நிருபர்களிடம் ஓதி விட்டார். அவர்கள் உடனுக்குடனே தம் அலுவலகங்களுக்கு போன் செய்தனர். மாலை பத்திரிகைகளில், ‘ஏழு தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்!’ என்ற கொட்டை எழுத்துக்களை காண நேர்ந்தது. இது எல்லாம் ஒரு சேம்பிள்தான்.

யார் அந்தச் சமூக விரோதிகள்?

இதேபோல் தூத்துக்குடி போராட்டத்தில் என்ன நடந்தது. ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்புகளின் மையப்பகுதி கேமராக்கள், ஆட்சியர் அலுவலகக்கேமராக்கள் எல்லாம் எதை பதிவு செய்தன. அவை குப்புறக்கவுத்தப்பட்டு இருந்ததாக தகவல்கள் வருகிறதே. உண்மையில் அப்படித்தான் இருந்ததா? அப்படியானால் அதை செய்தவர் யார்? சமூக விரோதிகள் ஊடுருவல் என்கிறார்களே. அவர்கள் எல்லாம் எதற்காக ஊடுருவினார்கள். ஒரு ஆலை வேண்டாம் என்று மக்கள் போராடுகிறார்கள். அது உயிருக்கு எத்தகைய சேதத்தை விளைவிக்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக சொல்கிறார்கள். அவர்கள் மத்தியில் நான்கைந்து பேர் ஊடுருவி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அதில் எண்ணெய் விட, விட எரியும் பிரச்சனையாக இருக்கும் மையப் பொருளான ஆலையை மூட நடவடிக்கை எடுப்பது முக்கியமா? அந்த சமூக விரோதிகளை குறி வைக்கிறேன் என்று அப்பாவி மக்களை சுட்டுக் கொல்வது முக்கியமா?

சரி, சமூக விரோதிகள், சமூக விரோதிகள் என்கிறார்களே. அப்படியானவர்கள் யார்? அவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள்.அந்த அமைப்புகள் தமிழகத்திலோ, இந்தியாவிலோ தடை செய்யப்பட்ட இயக்கங்களா? அவை எத்தனை அமைப்புகள். அந்த அமைப்பினர் எத்தனை பேர். பத்து பேரா? நூறு பேரா? ஆயிரம், லட்சம் பேரா? பத்து, நூறு பேர் பத்தாயிரம், இருபதாயிரம் பேர் கொண்ட மக்கள் கூட்டத்தில் புகுந்து மூளைச்சலவை செய்து போராட்டத்தை தூண்டுகிறார்கள் என்றால், அதை விட அதிகமான அதிகாரிகளை, அலுவலர்களை, ஊழியர்களை கொண்டுள்ள, கூடவே ரத,கஜ, துரக, பதாதைகளை வைத்துள்ள அரசு இயந்திரம் அதே மக்களிடம் தன் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லி அவர்களை வழிநடத்த வேண்டியதுதானே? சமூக விரோதிகள் பல்லாயிரக் கணக்கில் இருந்தார்கள் என்று நியாயப்படுத்தினால், அந்த அளவு சமூக விரோதிகளை கட்டுப்படுத்த இதுவரை அரசு ஏன் தவறியது? அதை மற்றவர்கள் பேசுகிறார்களோ இல்லையோ பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வந்திருக்கும் ரஜினி, அந்த மக்களின் குரலாக பேச வேண்டாமா?

ஒரு சொட்டு வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு தந்த தமிழனுக்கு ரஜினி தரும் பரிசா?

அடுத்தது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நியாயத்தை பேசும் ரஜினி அதே வேகத்தில் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் செய்தால் தொழில்கள் வராது என்கிறார். இது என்ன முரண்? ஸ்டெர்லைட் ஆலை மட்டுமல்ல, கோவையில் 1970களில் பவானி நதியை நாசமாக்கிய விஸ்கோஸ் ஆலை, 1980 களில் நொய்யலை விஷமாக்கிய திருப்பூரில் ஸ்தாபித்து நிற்கும் எண்ணிறைந்த சாயப்பட்டறைகள், 1990களில் ஈரோடு பவானியை நிர்மூலமாக்கின தோல் ஆலைகளின் வரலாறு ரஜினிக்கு தெரியாதா? அதன் மூலம் நிர்மூலமான லட்சக்கணக்கான ஹெக்டேர் நஞ்சை நிலங்கள் எத்தனை எத்தனை. ‘ஏற்கனவே நம் தமிழகத்தில் விவசாயம் முடிஞ்சு போச்சு என்பதால் தொழிற்சாலைகளை அனுமதிக்க சொல்லும் ரஜினி, விவசாயத்தை முடித்துக் கட்டியதே ஸ்டெர்லைட் போன்ற பெருமுதலாளிகளின் ஆலைகள்தான் என்பதை ஏன் மறைக்கிறார்? அப்படி மறைப்பதன் மூலம், ‘காவிரியில் கர்நாடகாக்காரன் விவசாயம் செய்து

அமோகமாக கொழிக்க வேண்டும். தமிழகத்தில் காப்பர், அம்மோனியம், ஜிங், காட்மியம், பிளாட்டினம், மீத்தேன் என வரும் ஆலைகளை நிறுவி தமிழன் பாழாய் போக வேண்டும்!’ என தமிழினப் போராளிகளின் எரியும் கூற்றுக்கு ரஜினி எண்ணெய் விடுவதாக ஆகாதா? இதுதான் ஒரு சொட்டு வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு தந்த தமிழனுக்கு ரஜினி தரும் பரிசா?

‘திமுக, அதிமுக இரண்டு பேருமே இந்த ஆலை விவகாரத்தில் அரசியல் செய்யறாங்க!’ என்று சொல்லும் இதே ரஜினிதான், ‘தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுப் போச்சு!’ என ஆறு மாதத்திற்கு முன்பே அறிவித்தார். ‘போர் வரட்டும் பார்த்துக்கலாம். இப்போது வேண்டாம். இன்னமும் நாம் அரசியலில் குதிக்கவில்லை. எனவே அதில் குதித்தவர்கள் நீந்தட்டும். இப்போதைக்கு நீங்களும் அரசியல் பேச வேண்டாம். நானும் பேச மாட்டேன்!’ என்றும் அறிவித்தார் அப்போது. காவிரிப் பிரச்சனை, மீத்தேன் வாயு பிரச்சனை, ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் என மக்கள் படுபாதகப் பிரச்சனைகளை முன்னெடுத்து போராட்டங்கள் பல செய்த போது கூட, ‘நாங்கள் ரஜினி மன்றங்களை கட்டமைத்துக் கொண்டிருக்கிறோம். பூத் கமிட்டிகளை போட்டுக் கொண்டிருக்கிறோம். எந்த விஷயத்தையும் வாய்திறக்கக் கூடாது என தலைவரே உத்திர விட்டுள்ளார்!’ என்பதையே திரும்பத் திரும்ப அழுத்தந்திருத்தமாக சொல்லி வந்தனர் ரஜினி மன்ற நிர்வாகிகள்.

எங்காவது போகும்போது வரும்போது பத்திரிகையாளர்கள் எதிர்ப்படும் போது ஒரு சில கேள்விகளுக்கு பட்டும் படாமல் பதில் சொல்லி வந்த ரஜினியை, ‘பரவாயில்லை. ரஜினி இன்னமும் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை. அதனால் வாய்மூடி மவுனம் காக்கிறார்!’ என்று ஒரு சாரார் பொறுத்துக் கொண்டாலும், இன்னொரு சாரார் பொங்கி பிரவகித்தனர். அவற்றில் ரஜினிக்கு எதிரான குரல்கள் வன்மமாகவும் வெடித்தது. இந்த சூழ்நிலையில்தான் 14 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டு, 144 தடை உத்திரவை காரணம் காட்டி தமிழக முதல்வரே மக்களை சந்திக்க மறுத்த நிலையில், அந்த 144 தடை உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் சாவகாசமாக தூத்துக்குடி சென்றிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களை ஆஸ்பத்திரியில் சந்தித்திருக்கிறார் ரஜினி. அரசியலுக்கு வருவதாக சொன்ன பிறகு முதன் முதலாக பொதுவெளியில் மக்களை சந்தித்து பேசின ரஜினி, அதே பொதுவெளியில் பத்திரிகையாளர்களையும் சந்தித்திருக்கிறார். அதில் நிருபர்கள்

கேள்விகளுக்கு நிறைய முரண்பட்ட பதில்களையும் சொல்லியிருக்கிறார். அதில் முரணுக்கெல்லாம் முரண். ‘முதல்வரை ராஜினாமா செய்யச் சொல்லி ஏன் ரஜினி இன்னமும் கேட்கவில்லை?’ என்ற கேள்விக்கான பதில்தான்.

‘சிஸ்டம் கெட்டுப் போச்சு!’ என்று ஆறுமாதங்களுக்கு முன்பே தமிழக அரசை பற்றி கமெண்ட் கொடுத்த ரஜினி, அந்த சிஸ்டத்திற்கு காரணியான அமைச்சரவையை பதவி விலகச் சொல்வதிலோ, முதல்வரை ராஜினமா செய்யச் சொல்வதிலோ என்ன தவறு இருக்க முடியும்? ‘அது தேவையில்லை. எல்லாத்துக்கும் ராஜினமான்னா என்னாவது?’ என்கிறார். ஒரு பக்கம் ஸ்டெர்லைட் ஆலை கூடாது. அவர்கள் கோர்ட்டுக்கு போனால், ஆலையை திறக்க முயற்சித்தால் அதை விட மோசமான செயல் வேறொன்று இருக்க முடியாது என்பவர் அதே வேகத்தில் ஆலைகளுக்கு எதிரான போராட்டம் என்றால் தொழிற்சாலைகள் வராது என்று தொழிலதிபர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார். அப்படி ஆலைகள் வரும்போது அந்த ஆலைகள் எப்படிப்பட்டவை என்பதை கவனமாக பரிசீலித்து அரசு அதற்கு அனுமதிக்க வேண்டும் என்கிறார். அதை மீறி தவறு நடந்தால் அதைப் பற்றி பத்திரிகைகள், மீடியாக்கள், அத்தனை டிவிக்களிலும் அதைப் பற்றி அம்பலப்படுத்த வேண்டும். அதேபோல் சமூக விரோதிகளை இனம் காட்டுவதும் மீடியாக்களின் கடமை என்கிறார்.

அப்படியானால் அவர் பாஷையில், ‘சிஸ்டம் கெட்டுப்போன’ அரசாங்கத்தில் இது எப்படி சாத்தியம்?’ என்ற கேள்வியை அவரேதான் அவருக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். இங்கே அவர் மோடியின் குரலாக மட்டுமல்ல, தொழிலதிபர்களின் குரலாய், தமிழக ஆட்சியாளர்களின் குரலாய், அதிகார வர்க்கத்தின் குரலாய் ஒலித்தாரேயன்றி மக்களின் குரலாய் ஒலிக்கவில்லை. ஒரு வேளை, ‘இதுதான் அவரின் அசல் குரல்!’ என்றால் தமிழக அரசியலுக்கான குரலாக அது இருக்காது.

தெளிவான ஆலோசனை இருந்தும் பதற்றமடைந்த ரஜினி?

ரஜினி தூத்துக்குடி செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்பே அவருக்கு நெருக்கமான அரசியல் ஆலோசகர், ‘பாதிக்கப்பட்ட மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். என்ன பேச வேண்டும். நிருபர் சந்திப்பில் கேள்விகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்!’ என்றெல்லாம் தெளிவுபட எடுத்துரைத்தாராம். ஆனால் அதையெல்லாம் அவர் சுத்தமாக மறந்து விட்டார். ஆரம்பம் முதலே பதட்டமாகி விட்டது போல் தான் பேசினார். நிருபர் சந்திப்பில் அது கூடுதலாகவே தெரிந்தது. பல இடங்களில் சினிமா வசனம் போல் பேசுகிறார். அது அரசியலுக்கு நல்லதல்ல. குறிப்பாக துக்கம் விசாரிக்கப் போகும் ஊரில் இத்தனை ரசிகர்கள் அவரைக் காண வந்ததே தப்பு. அது அவருக்கு எதிர்வினையே காட்டும். இதை ரஜினிக்கு அரசியல் ஆலோசனை கொடுத்த அந்த பிரமுகர் தூத்துக்குடி விசிட்டை ரஜினி முடித்துவிட்டு கிளம்பியபோதே போனில் தெரிவித்து விட்டாராம். இதைப் பற்றி நம்மிடம் பேசிய ஒரு பிரமுகர், ‘அரசியலுக்கு தொண்டர்கள் பலமும் முக்கியம். பொது இடத்தில் பேச்சு சாதுர்யமும் முக்கியம். ரசிகர்கள் அரசியல் தொண்டர்களாக மாறுவதில் கூட பல்வேறு சூட்சுமங்கள் இருக்கிறது. அதை இந்த ரஜினியின் தூத்துக்குடி விசிட் சுத்தமாக மாற்றி விட்டது!’ என்று குறிப்பிட்டார்.

Leave a comment