நடந்த உண்மைகளைக் கூற திறந்த கலந்துரையாடலுக்கு தயார்- ஜனாதிபதி அறிவிப்பு

6097 0

அரசாங்கத்தின் கடந்த மூன்றரை வருடங்களில் இந்த நாட்டில் என்ன நடாந்தது என்பது குறித்து திறந்த  கலந்துரையாடல் ஒன்றுக்கோ, தொலைக்காட்சி பொது நிகழ்ச்சிக்கோ அழைத்தால் வருவதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மலேசியாவின் பிரதமர் மஹாதீர் முஹம்மத் பதவியேற்று ஐந்து நாட்களில்  ஒன்பது  அமைச்சர்களை கைது செய்ததாகவும், 144 வர்த்தகர்களை மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்ததாகவும் ஆங்கில தேசிய ஊடகமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்னுடைய புகைப்படத்தையும் அவருடைய புகைப்படத்தையும் போட்டு இந்த தகவலைப் போட்டுள்ளனர்.

என்னுடைய புகைப்படத்துக்குக் கீழால் 3 வருடம் எனக் குறிப்பிட்டு கேள்விக் குறியை இட்டுள்ளனர். இந்த தகவல் பொய்யானது. இந்த செய்தி வெளியான உடன் நான் மலேசியாவிலுள்ள தூதரகத்துக்கு தொடர்பு கொண்டு கதைத்தேன். அவர்கள் அப்படியொன்று நடக்க வில்லையென்று கூறினர்.

நான் இந்த அரசாங்கத்தைப் பொறுப்பெடுத்த நாள் முதல் நடைபெற்ற பல்வேறு விடயங்கள் உள்ளன. அவற்றை நான் கூற விரும்பவில்லை. தேவை ஏற்பட்டால் கூறுவதற்கும் நான் பின்நிற்பதில்லையெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

எனது அரசியல் வாழ்வில் 47 வருடங்களையும் வரைபில் காட்டினால், கீழ் இருந்து உயரத்தை நோக்கியே சென்றுள்ளது. இந்த அரசாங்கத்தின் 3 வருடங்களில் தான் அது கீழ் நோக்கிச் சென்றுள்ளது எனவும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரரின் 76 பிறந்த தினத்தை முன்னிட்டு இலங்கை மன்றக் கல்லூரியின் இன்று (30) இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

Leave a comment