இன்று தூத்துக்குடி செல்கிறார் ரஜினி!

361 0

துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி செல்கிறார்.

ஸ்டெர்லைட் ஆளைக்கு எதிராக 100 நாட்கள் போராட்டம் நடத்திய பொதுமக்கள் கடந்த 22-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் பேரணியாகச் சென்று மனு அளிக்க முடிவு செய்தனர். இதற்கு தடை விதித்த அரசு போராட்டத்தை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு போட்டது.

அன்று தடையை மீறி பேரணியாகச் சென்ற பொதுமக்கள் மீது ஆட்சியர் அலுவலகம் அருகே போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூடு மற்றும் போலீஸ் தாக்குதல் காரணமாக படுகாயம் அடைந்தனர்.

தமிழக அரசு கடுமையாக விமர்சனத்துக்குள்ளான இந்தச் சம்பவத்தில் ஐந்து நாட்களாக ஒரு அமைச்சர்கூட பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

சட்டப்பேரவை கூடுவதை ஒட்டி அதில் எதிர்க்கட்சிகள் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து கேள்வி எழுப்புவார்கள் என்ற தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் ஓபிஎஸ், ஜெயக்குமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் சென்றனர்.

எடுத்ததெற்கெல்லாம் ஆய்வு நடத்தும் ஆளுநர் ஏன் தூத்துக்குடி செல்லவில்லை என்ற கேள்வியும், பாத்ரூமை பார்க்க செல்பவர் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க போகமாட்டாரா? என்று வலைதளங்களில் நெட்டிசன்களும் கிண்டல் அடித்தனர்.

இந்நிலையில் ஆளுநரும் நேற்று தூத்துக்குடி போய் சென்று பார்த்தார். தூத்துக்குடியில் நேரில் சென்று அனைத்து அரசியல் தலைவர்களும் பார்த்தனர். பார்த்தவர்கள் மீது வழக்கும் பாய்ந்தது. மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்த கமல்ஹாசனும் சென்று பார்த்தார்.

ஆனால் மாவட்டம் முழுதும் வட்டம் தோறும் அமைப்பை தொடங்கி அரசியலுக்கு வந்துவிட்ட ரஜினிகாந்த் இதுவரை தூத்துக்குடி பக்கம் செல்லவில்லை. இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்க்க ரஜினிகாந்த் இன்று அங்கு செல்கிறார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். ரஜினி நடித்து வெளிவரும் காலா திரைப்படம் ஜூன் 7 ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment