மழை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

220 0

நாட்டில் பெய்து வரும் அடை மழையினால் இதுவரை 16 பேர் உயிரிழந்திருப்பதுடன் ஒருவர் காணாமற்போயிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இக்காலநிலை எதிர்வரும் வாரமும் தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை காரணமாக நாடு முழுவதும் பிற்பகல் வேளைகளில் அடை மழை பெய்யும் அதேநேரம் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.

சபரகமுவ, மேல், மத்திய, வட மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் ஏனைய இடங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்சியும் பெய்யுமென்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் நாடு முழுவதும் குளிர் காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறும் திணைக்களம் கேட்டுள்ளது.

கடற்பரப்பிற்கு மேலும் முகில் கூட்டம் அதிகமாக உள்ளதால் கொழும்பு மற்றும் மன்னாருக்கூடாக காலியிலிருந்து காங்கேசந்துறை வரை கடலில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.

Leave a comment