“20 ஆம் திருத்த யோசனை சபாநாயகரிடம் கையளிக்கப்படும்”-ஜே.வி.பி

211 0

நிறைவேற்று  ஜனாதிபதி முறைமையினை நீக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி  தனி நபர் பிரேரணையாக கொண்டுவரும் 20ஆம் திருத்த யோசனையை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

சர்வாதிகார ஜனாதிபதியை நீக்கும் இறுதி சந்தர்ப்பம் இதுவென்பதை கருத்தில்கொண்டு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அக்கட்சி கூறுகின்றது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை  கொண்டுவரப்பட தீர்மானம் எடுக்கப்பட்ட நேரத்தில் மக்கள் விடுதலை முன்னணி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கும் 20ஆம் திருத்த யோசனையினை  தனிநபர் பிரேரணையாக பாரளுமன்றத்தில் கொண்டுவருவதாக கூறப்பட்ட போதிலும் கடந்த காலத்தில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த வாரம் தாம் 20ஆம் திருத்த யோசனையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அதே நேரத்தில் சகல கட்சிகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்திருந்தார்.

நாளை வெள்ளிக்கிழமை கூடவுள்ள பாராளுமன்ற கூட்டத்திற்கு முன்னர் தாம் 20ஆம் திருத்த யோசனையினை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்க இருக்கும் இறுதி சந்தர்ப்பமாக இதனை கருத வேண்டும் எனவும், தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துடன் கொடுத்த பிரதான வாக்குறுதி இது என்பதை மறந்துவிடக்கூடாது எனவும் கூறும் ஜே.வி.பி யின்  தலைவர் அனுரகுமார திசாநாயக பாரளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் 20ஆம் திருத்த சட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் பல அவசியமான திட்டங்கள் பலவீனமான ஆட்சியிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டு பலவீனமாக ஆட்சியில் 17ஆம் திருத்தும் கொண்டுவரப்பட்டது. பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நீக்கப்பட்டது. எனினும் இந்த ஆட்சியில் பலமான ஒரு கட்சி அதிகாரம் இல்லாத போதிலும் 19 ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே இப்போது பலவீன அரசாங்கம் இருந்தாலும் கூட மக்கள் நலன்சார் அரசியல் அமைப்பு மாற்றங்களை கொண்டுவர முடியும், எனவே மக்கள் விடுதலை முன்னணியாக நாம்   20 ஆம் திருத்த சட்ட திருத்தமாக அரசியல் அமைப்பு திருத்தத்தினை தனிநபர் பிரேரணையாக பாராளுமன்றத்தில் முன்வைக்கின்றோம் என அவர் குறிப்பிட்டார்.

Leave a comment