உயிர்கொல்லி வைரஸ் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

211 0

நாட்டில் குறிப்பாக தென் பகுதியில் பரவிவரும் வைரஸ் தாக்கம் தொடர்பில் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

அத்தோடு, நோய்க்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் தகுதியான வைத்தியரை நாடுவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவகையான வைரஸ் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே சுகாதார பணிப்பாளர் நாயகம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”தென்பகுதியில் பரவியுள்ள வைரஸ் தாக்கம் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், இருமல், தடிமன், காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் தேர்ச்சிபெற்ற வைத்தியர் ஒருவரை நாடுவது அவசியம். இந்த வைரஸ் சிறுவர்களையே அதிகம் தாக்குவதால், பெற்றோர் அவதானமாக செயற்படுவது அவசியம்.

இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 7 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அத்தோடு, 500 தொடக்கம் 600 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கம்புறுபிட்டிய தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை மற்றும் மாத்தறை மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 அத்தோடு, இந்த வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்காக வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு முகக் கவசங்களை வழங்கியுள்ளோம்” என்றார்.

Leave a comment