வன்முறை மேலும் பரவாமல் தடுக்க தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கம்

217 0

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வன்முறை மேலும் பரவாமல் தடுக்க இண்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் இன்று போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் முயன்றனர். ஆனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், பொதுமக்கள் கற்களை வீசி தாக்கினர். போலீசாரும் தடியடி நடத்தினர்.
ஒரு கட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் காளியப்பன் (வயது 22) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் போலீஸ் தரப்பில் எஸ்.பி. உள்ளிட்ட சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
சில மணிநேரங்களுக்கு பின்னர் மீண்டும் அண்ணாநகர் 6-வது தெரு பகுதியில் போலீசார் – போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், வன்முறை மேலும் பரவாமல் தடுக்கவும், வதந்திகள் பரவாமல் தடுக்கவும் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளதாக தமிழக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a comment