சீமானை கைது செய்ய போலீஸ் தீவிரம்: முன்ஜாமீன் கேட்டு மனு

256 0

மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதிய சம்பவத்தில் சீமானை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தன்னை கைது செய்யாமல் இருக்க சீமான் தரப்பில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

திருச்சி விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை வைகோ, சீமானை வரவேற்கும் நிகழ்ச்சியின்போது ம.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடையே பயங்கர மோதல் உருவானது.

இதுதொடர்பாக திருச்சி விமான நிலைய போலீசார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 11 பேர் மீது கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் 7 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே சீமானை கைது செய்ய தீவிரம் காட்டி வரும் திருச்சி போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

இந்த நிலையில் தன்னை கைது செய்யாமல் இருக்கும் பொருட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தரப்பில் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் இன்று வக்கீல் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்தார்.

சீமான், லஜபதிராய், நெல்லை சிவா, திருச்சி மாவட்ட தலைவர் வக்கீல் பிரபு ஆகிய 4 பேருக்கும் முன் ஜாமீன் கேட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் திருச்சி விமான நிலையத்தில் கட்சி தொண்டர்களிடையே மோதல் சம்பவம் நடந்தபோது சீமான் உள்ளிட்டோர் விமான நிலையத்தின் உள் பகுதியில் இருந்ததாகவும், தவறுதலாக பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கும் இந்த மோதலுக்கும் தொடர்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment